×

வெஜிடேரியன் செல்லப்பிராணிகள்!

நன்றி குங்குமம் முத்தாரம்

தலைப்பைப் படித்ததும் யாரும் ‘ப்ளூ கிராஸ் ஆஃப் இந்தியா’வுக்கோ, த்ரிஷாவுக்கோ மெயில் அனுப்பக்கூடாது. இது இங்கில்லை, இங்கிலாந்தில்! ‘‘நான் ‘வெகன்’ டயட்டுக்கு மாறிய பின்னும் என்னுடைய செல்ல நாய்களான டாமி மற்றும் பெல்லாவுக்கு அவை விரும்பிச் சாப்பிடுகிற பால், சிக்கன், மட்டனைத்தான் கொடுத்துவந்தேன். ஆனால், சில மாதங்கள் கழித்து ‘இனிமேலும் என்னால் இது முடியாது’ என்று கால்நடை மருத்துவர்களிடம் ஆலோசித்தபிறகே இந்த முடிவை எடுத்தேன்’’ என்கிறார் செல்லப் பிராணிகளுக்கு ஸ்ட்ரிக்ட்டான ‘வெகன்’ டயட்டை ஆரம்பித்திருக்கும் பவ்லா. இங்கிலாந்தின் தென்பகுதி யான கோஸ்போர்ட்டில் தனியாக வசித்து வரும் 41 வயதான பவ்லா ‘வெகன்’ பேக்கரியை நடத்தி வருகிறார். கடந்த 26 வருடங்களாக சைவம் மட்டுமே சாப்பிட்டு வந்த பவ்லா, இந்த வருட ஆரம்பத்தில்தான் ‘வெகன்’ டயட்டுக்கு மாறினார்.

இறைச்சி, முட்டை மட்டுமின்றி தேன், பால், பால் சார்ந்த உணவுப் பொருட்களையும் தவிர்க்கச் சொல்லும் ஸ்ட்ரிக்ட்டான டயட்தான் இந்த ‘வெகன்’! வேகவைக்காத பச்சைக்  காய்கறிகள், பழங்கள், மூலிகைகளை மட்டுமே சாப்பிட வேண்டும். நம்ம ஊர் பேலியோ ஜுரம் போல, இப்போது  இந்த  டயட் முறை  ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிவருகிறது. ‘‘எனக்குக் குழந்தைகள் இல்லை. ஒருவேளை குழந்தைகள் இருந்திருந்தால் அவர்களின் ஆரோக்கியத்துக்கு என்ன செய்வேனோ அதைத்தான் என் செல்லப் பிராணிகளுக்கும் செய்திருக்கிறேன்’’ என்று பாசமாகச் சொல்லும் பவ்லாவுக்கு எதிர்ப்புக் குரல்களும் எழுகின்றன. ‘‘பவ்லா ‘வெகன்’ டயட்டுக்கு மாறியது வரவேற்க வேண்டியது.

இப்போது இந்த உணவுமுறைதான் மனிதனுக்கு அவசியமானது. நாய்கள் பொதுவாகவே அசைவ உண்ணிகள். அவற்றை ‘வெகன்’ டயட் டுக்கு உட்படுத்தியது இயற்கைக்கு மாறானது. இது கண்டிக்கத்தக்கது’’ என்கின்றனர் விலங்குகள் நல அமைப்பினர். ‘‘நான் சரியான முடிவைத்தான் எடுத்திருக்கிறேன். என்னுடைய நாய் மற்றும் பூனைகளைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். மட்டன், சிக்கனைவிட அவை உருளைக்கிழங்கு, பீன்ஸ் போன்ற பச்சைக் காய்கறிகளை, பழங்களை விரும்பிச் சாப்பிடுகின்றன. முன்பைவிட அவை ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக  இருக்கின்றன’’ என்று பதிலளிக்கிற பவ்லாவுக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவுகளும் குவிகின்றன. அதெல்லாம் சரி! அந்த நாயும், பூனையும் என்ன சொல்லுது?

Tags : Blue Cross of India, Vegetarian, Pets
× RELATED பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும்...