×

ரயில்களில் கொள்ளையடிக்கும் வடமாநில கும்பல் சுற்றிவளைப்பு

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கடந்த 19ம் தேதி ஜெய்ப்பூருக்கு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் பேசின்பிரிட்ஜ் அருகே மெதுவாக சென்றபோது, வடமாநில வாலிபர்கள் 6 பேர், முகத்தில் துணி கட்டிக்கொண்டு ரயிலில் ஏறி, பயணிகளை கத்தி முனையில் மிரட்டி 20 ஆயிரம், மோதிரம், 3 செல்போன் மற்றும் 6 சவரன் நகையை பறித்துக்கொண்டு, ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து தப்பினர்.அதே நாளில், தண்டையார்பேட்டை அருகே மின்சார ரயிலில் ஏறிய வடமாநில கொள்ளையர்கள், கத்தி முனையில் பயணிகளிடம் செல்போன், ₹5 ஆயிரத்தை பறித்து சென்றனர். சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் கொள்ளையர்களை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் ரயில் கொள்ளையர்கள் கும்மிடிப்பூண்டியில் பதுங்கியிருப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று முன்தினம் சம்பவ இடத்துக்கு சென்று, காட்டு பகுதியில் பதுங்கியிருந்த 6 பேரை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம், நகை, கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், வடமாநில கொள்ளையர்கள் கும்மிடிப்பூண்டி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, ரயில்களில் கொள்ளையடித்து வந்ததும், கொள்ளையடித்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததும் தெரியவந்துள்ளது. கைதான 6 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

வேலூர் பெண் பிடிபட்டார்
சென்னை புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகளின் செல்போன், நகை, பணம் உள்ளிட்டவற்றை திருடி வந்த வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த மோனிஷா (23) என்பவரை போலீசார் நேற்று முன்தினம் இரவு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கைது செய்தனர்.  மேலும் அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 32 சவரன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.



Tags : robbery gang , North robbery ,gang, raiding , trains
× RELATED வேலூர் மாநகர பகுதியில் நகை பறிப்பு கும்பலை பிடிக்க 2 தனிப்படைகள்