×

இன்று (நவ.23) கவிஞர் சுரதா பிறந்தநாள் உவமைக்கவிஞர்களின் மன்னன்

மரபுக்கவிஞர், உவமைக்கவிஞர் என அனைவராலும் அழைக்கப்பட்ட கவிஞர் சுரதா,  தஞ்சை மாவட்டம், பழையனூரில் 1921, நவம்பர் 23ம் தேதி பிறந்தவர். இவரது இயற்பெயர் ராசகோபாலன். சீர்காழியில் வசித்து வந்த அருணாசல தேசிகர் தமிழ் இலக்கணங்களைக் கற்று தேர்ந்தவர். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால், அவரது இயற்பெயரான சுப்புரத்தினம் என்ற பெயருடன் தாசனை சேர்த்து, ‘சுப்புரத்தினதாசன்’ என தனது பெயரை மாற்றிக்கொண்டார். அதைத்தான் சுருக்கமாக ‘சுரதா’ என்ற பெயரில் பல மரபுக்கவிதைகளை எழுதி வந்தார்.

அந்தக் காலத்தில் அரசவைக் கவிஞராக விளங்கிய நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளையுடன் பல மாதங்கள் தங்கியிருந்து அவருடைய எழுத்துப் பணிக்கு உதவினார். இதன்மூலம் சிறந்த இலக்கியவாதியாய் தமிழ் உலகுக்கு அறிமுகமானார். யாரையும் பின்பற்றி எழுதுவதில் உடன்பாடு இல்லாதவர். தம்முடைய பாடல்களில் புதுப்புது உவமைகளைப் புகுத்திப் புகழ் பெற்றார். இதன் காரணமாக சிறுகதை எழுத்தாளர் ஜெகசிற்பியால், ‘உவமைக் கவிஞர்’ எனப் பாராட்டப்பட்டார்.

புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த ‘தலைவன்’ இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். 1955ல் ‘காவியம்’ என்ற வார இதழைத் தொடங்கினார். ‘இலக்கியம்’, ‘ஊர்வலம்’, ‘விண்மீன்’, ‘சுரதா’ என பல கவிதை இதழ்களை வெளியிட்டார். மருது பாண்டியர் உள்ளிட்ட வரலாற்று நாயகர்கள் குறித்த அரிய தகவல்களை புத்தக வடிவில் ஆவணப்படுத்தினார். பல நூல்களாக இருந்த பாரதிதாசன் கவிதைகளை ஒரே தொகுப்பாக மாற்றினார்.
உவமைகள் மூலம் தன்னுடைய கவிதைகளையும், பாடல்களையும் எழுதிய சுரதாவை... வாலிபக் கவிஞர் வாலி, ‘‘அவன் உரைக்காத உவமையில்லை... அவனுக்குத்தான் உவமையில்லை’’ என்று புகழ்ந்தார்.

1942-ம் ஆண்டு சுய மரியாதை கருத்துகளைப் பரப்பும் வகையில் நாடகக்குழு ஒன்று இயங்கி வந்தது. இந்த நாடகக் குழுவினரால் பாரதிதாசன் இயற்றிய நாடகம் ஒன்று தமிழகம் எங்கும் நடத்தப்பட்டது. இதில், அமைச்சர் வேடத்தில் சுரதா நடித்தார். வாழ்க்கையில் நடிக்கத் தெரியாத அவர், நாடகத்தில் நடித்து அசத்தினாராம். ‘முதன்முதலில்’ என்னும் வார்த்தைக்குச் சொந்தக்காரராக விளங்குபவரும் உவமைக் கவிஞர் சுரதாதான். வீட்டுக்கு வீடு கவியரங்கம், முழுநிலா கவியரங்கம், படகு கவியரங்கம், ஆற்றுக் கவியரங்கம் என விதவிதமாக கவியரங்க நிகழ்ச்சிகளை முதன்முதலில் நடத்தி இளைஞர்களைக் கவிதை பக்கம் சாயவைத்தவர் சுரதா.

முதன்முதலில் கவிதைகளில் திரைப்படச் செய்திகளைத் தந்து இதழ் நடத்தியவரும், அதிக கவியரங்கங்களில் பங்கேற்ற கவிஞரும் இவரே. 1944ல் ‘மங்கையர்க்கரசி’ என்னும் திரைப்படத்துக்கு உரையாடல் எழுதினார். இந்தத் திரைப்பட உரையாடல்தான், ஒரு திரைப்படத்தின் கதை, வசன நூலாக முதன்முதலில் வெளிவந்தது. இதன்மூலம், குறைந்த வயதில் ‘முதன்முதலில்’ திரைப்பட உரையாடலை எழுதியவர் என்ற பெருமையைப் பெற்றார். தமிழக அரசு, ‘முதன்முதலில்’ ஏற்படுத்திய பாவேந்தர் விருதைப் பெற்றவரும் சுரதாதான். 20-ம் நூற்றாண்டுக் கவிஞர்களில் முதன்முதலில் ராஜராஜன் விருதைப் பெற்றவரும் இவரே. ‘தேன்மழை’ நூலுக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. 1956-ல், ‘பட்டத்தரசி’ என்கிற சிறு காவியத்தை வெளியிட்டார். 16 பக்கங்கள் கொண்ட பரபரப்புக்குரிய அந்த நூலின் முன்னுரைக் கவிதையை ஒரு மணிநேரத்தில் எழுதி முடித்து சாதனை படைத்தார்.

கலைமாமணி, மகாகவி குமரன் ஆசான் உட்பட எண்ணற்ற விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்ற உவமைக் கவிஞர் சுரதா, தமிழறிஞர்கள் பிறந்த ஊர்தோறும் சென்று அங்குள்ள மண்ணை எடுத்து மண் கலயத்தில் சேர்த்து வந்தார். ‘‘அவற்றைத் திரட்டி என்ன செய்யப் போகிறேன் என்பது ஒரு கனவு’’ எனக் கூறி வந்தவர், அதனை நிறைவேற்றாமலேயே மறைந்துவிட்டார். அவர் மறைந்தாலும், உவமைகள் உருவில் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

Tags : Surata ,birthdays ,Kavinyar Suratha , November 23,Kavinyar Suratha,Suratha
× RELATED நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்க்கு இது 126வது...