×

தமிழ் முறைப்படி திருமணம் அமெரிக்க பெண்ணை காதலித்து கரம்பிடித்த புதுச்சேரி இன்ஜினியர்

புதுச்சேரி : அமெரிக்க பெண்ணை காதலித்து புதுச்சேரி இன்ஜினியர் கரம்பிடித்தார். புதுச்சேரியில் அவர்களது திருமணம் தமிழ் முறைப்படி நடந்தது. புதுச்சேரி எழில்நகரை சேர்ந்தவர்கள் சந்திரசேகரன் - ரேவதி தம்பதியர். சந்திரசேகரன், புதுச்சேரி ஏஎப்டி மில்லில் மேலாளராக பணிபுரிந்து 2011ல் ஓய்வு பெற்றவர். இவருக்கு தீபக்முரளி (34) என்ற மகனும், லாவண்யா என்ற மகளும் உள்ளனர். லாவண்யாவுக்கு ஏற்கனவே திருமணமாகி அமெரிக்காவில் கணவருடன் வசித்து வருகிறார்.

தீபக்முரளி புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்றவர். 2008ம் ஆண்டு கிண்டி இன்ஜினியரிங் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பம் முடித்துவிட்டு, அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்பில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் (எம்.எஸ்.) முடித்தார்.  பின்னர் அங்குள்ள நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்து 8 வருடங்களில் பதவி உயர்வு பெற்று, அந்நிறுவனத்தின் துணை தலைவராக உள்ளார். தற்போது 32 வயதாகும் தீபக்முரளிக்கும், அதே நிறுவனத்தில் பணிபுரியும் அமெரிக்காவை சேர்ந்த சாரா பையர்ஸ் (30) என்பவருக்கும் 2 வருடத்திற்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதையடுத்து காதலர்கள் திருமணம் செய்ய முடிவு செய்து, இருதரப்பு பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 5ம் தேதி அமெரிக்காவில் பதிவு திருமணம் செய்தனர். அதனை தொடர்ந்து முறைப்படி திருமணம் அமெரிக்காவிலேயே நடைபெற்றது.

இதையடுத்து இந்திய தமிழ் கலாச்சாரப்படி திருமணம் செய்ய மணமகனின் பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி நேற்று புதுச்சேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் நடைபெற்றது. மாப்பிள்ளை பட்டு வேட்டி, சட்டை அணிந்தும், மணப்பெண் பட்டுச்சேலை உடுத்தியும் மணமேடைக்கு வந்தனர். தொடர்ந்து மணப்பெண் கழுத்தில் மாப்பிள்ளை தீபக்முரளி தாலி கட்டினார். இந்த திருமண விழாவுக்கு மணமக்கள் நண்பர்கள் 20 பேர் அமெரிக்காவில் இருந்து புதுச்சேரி வந்திருந்தனர்.

அவர்களும் தமிழ் கலாச்சார உடைகளான பட்டுவேட்டி, பட்டுசேலை உடுத்தி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும், தங்களது செல்போனில் திருமணத்தை வீடியோ எடுத்து பதிவு செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மணமக்களுக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : engineer ,Puducherry ,American ,guy ,America Girl , Tamil Formal Marriage,America Girl, marriage,tamil guy
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு