சென்னை: ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஐஐடி மாணவர்கள் அமைப்பினர் உண்ணா விரதம், உள்ளிருப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ெசன்னை ஐஐடியில் படித்து வந்த மாணவி பாத்திமா கடந்த 9ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து ஐஐடியில் படித்து வரும் மாணவர்களின் சங்கங்கள், மாணவர்கள் அமைப்புகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டு ஐஐடி நிர்வாகத்துக்கு மனு கொடுத்துள்ளனர். இந்நிலையில், ஐஐடி நிர்வாகத்தினர் மவுனமாக இருப்பதால் மாணவர்கள் அமைப்பின் சார்பில் 30 பேர் கொண்ட குழு உண்ணாவிரதம் இருக்கப் போவதாக நேற்று முன்தினம் அறிவித்தனர். தொடர்ந்து நேற்று காலை முதல் ஐஐடி நுழைவாயிலில் 2 மாணவர்கள் தடையை மீறி உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
இதுகுறித்து உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்கள் கூறியதாவது: ஐஐடியில் கடந்த 9ம் தேதி மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து ஒரு உள்ளார்ந்த விசாரணை நடத்த வேண்டும். கடந்த செமஸ்டரில் மாணவர் அமைப்பின் சார்பில் சில தீர்மானங்கள் கொண்டு வந்தோம். அதன் மீது உரிய ஆய்வு செய்ய வெளிப்படையான குழு ஒன்றை அமைக்க வேண்டும். மாணவர்கள் பிரச்னை குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும். அனைத்து துறைகளையும் ஒன்றிணைத்து குறை தீர் மையம் உருவாக்க வேண்டும். மாணவர்களின் குறைகளை கேட்க வேண்டும், மாணவர்கள் கொடுக்கின்ற புகார்கள் மீது உரிய விசாரணை நடத்தி அதற்கு தீர்வு காணவேண்டும். அதற்கான தொடக்கப் பணிகளை செய்ய வேண்டும் என்று 3 வகையான கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், மாணவர்களை சந்தித்து பேச டீன் முன்வர வேண்டும் என்று கேட்டு வருகிறோம்.
இன்று இரவு 8 மணி அளவில் டீன் எங்களை சந்தித்து பேசுவதாக தெரிவித்துள்ளார். அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே உண்ணாவிரதத்தை தொடர்வதா என்பதை முடிவு செய்வோம் என்றனர். ஐஐடியை சேர்ந்த வேறு ஒரு மாணவர் அமைப்பினர் ஹரி என்ற மாணவர் தலைமையில் ஐஐடி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இரவு 8 மணி அளவில் ஐஐடியின் டீன்கள் சிவக்குமார், கோஷி வர்கீஸ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். மாணவர்கள் தங்கள் தரப்பு 3 கோரிக்கைகளை முன் வைத்தனர். அதைக்கேட்ட டீன்கள், அதுகுறித்து விவாதித்து பதில் தெரிவிப்பதாக கூறினர். இதையடுத்து, அவர்கள் பதில் கூறும் வரையில் உள்ளிருப்பு போராட்டம், உண்ணாவிரதம் தொடரும் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.