சாலை போக்குவரத்து நிறுவனத்தின் இலவச இலகுரக வாகன ஓட்டுனர் பயிற்சி

சென்னை: சென்னை, தரமணியில் சாலை போக்குவரத்து நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் கும்மிபூண்டி, திருச்சி உள்ளிட்ட 19 இடங்களில் கனரக வாகனம் ஓட்டுவதற்கான பயிற்சி மையங்களை ஏற்படுத்தியுள்ளது. இதில்,  பல்வேறு விதமான கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கு பயிற்சியளிக்கப்படுகிறது. 2018-19ம் ஆண்டு வரை மொத்தம் 60,300க்கும் மேற்பட்டோருக்கு கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.இதேபோல் கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்களை ஓட்டுவதற்கான இலவச பயிற்சி மையங்கள் சென்னை, திருச்சி, ஈரோடு ஆகிய இடங்களில் உள்ளன. இங்கு அரசின் திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து இலவசமாக பயிற்சி  அளிக்கப்படுகிறது. இதற்கு பொதுமக்களிடத்தில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெண்கள் அதிக அளவில் இலவச பயிற்சியை எடுத்துக்கொண்டுள்ளனர்.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘இலகுரக வாகனம் ஓட்டுவதற்கான இலவச பயிற்சி ஆண்கள், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. இங்கு பெண்கள் அதிக அளவில் பயிற்சிக்கு வருகிறார்கள். இதற்கு 6 ஏக்கர்  அளவில் பரப்பளவு கொண்ட இடத்தில் பயிற்சி அளிக்கப்படுவதே காரணம்.

இதுதவிர ஏராளமான சிறப்பு வசதிகள் உள்ளன. பயிற்சி 6 வார காலங்கள் நடக்கும். பயிற்சியை முடித்தவுடன், அவர்களுக்கு இலவசமாக லைசென்ஸ்சும் நாங்களே எடுத்துக்கொடுப்போம். கனரக வாகனம் ஓட்டுபவர்களுக்கு கும்மிடிப்பூண்டியில்  பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கான மையங்கள் மாநிலத்தில் 19 இடங்களில் உள்ளன.புனேவுக்கு அடுத்தபடியாக சிறப்பான வசதி தரமணியில் உள்ளது. பயிற்சி அளிக்கும் பணியில் இருப்பவர்கள் எம்டிசி உள்ளிட்ட அரசு போக்குவரத்துக்கழகங்களில் ஓட்டுனராக 30 ஆண்டுகளுக்கு மேல் பணி அனுபவம் கொண்டவர்களாவர்.  இதனால் சிறப்பான, தரமான பயிற்சி கிடைக்கும்.இதுதவிர விபத்து ஏற்படுத்தும் வாகன ஓட்டிக்கும், இங்கு புத்தாக்க பயிற்சி வழங்கப்படுகிறது. பள்ளி, கல்லூரி வாகனங்களை வேகமாக ஓட்டுபவர்களுக்கும் இங்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இலவச பயிற்சி முடிப்போருக்கு, லைசென்ஸ்  எடுத்துக்கொடுத்த பிறகு, வேலைவாய்ப்பும் தனியார் நிறுவனங்களில் ஏற்படுத்திக்கொடுப்போம் என்றனர்.

Related Stories:

>