×

6 போக்குவரத்து கழகங்களுக்கு 150 பஸ்கள் கொள்முதல் செய்ய டெண்டர் வெளியீடு: சாலை போக்குவரத்து நிறுவனம் தகவல்

சென்னை: 6 போக்குவரத்து கழகங்களுக்கு 150 தாழ்தள பஸ்கள் கொள்முதல் செய்ய சாலை போக்குவரத்து நிறுவனம் சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 1,771 பஸ்கள், கொள்முதல் செய்வதற்கான டெண்டர் வெளியிடப்பட்டது. அதில் 60 சதவீத பஸ்கள் நகரங்களில் இயக்கப்படும். இந்த பஸ்களை மாற்றுத்தினாளிகள் பயன்படுத்த முடியாது என கூறி மாற்றுத்திறனாளி உரிமைகள் செயற்பாட்டாளர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதில் பெரும்பாலான பஸ்கள் நகரப்பகுதிகளில் இயக்கபடுவதால் பருவ மழைக் காலங்களில் சுரங்கப்பாதைகளில் தேங்கும் நீர் பஸ்சுக்குள் புகும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதையடுத்து 157 பஸ்களை தாழ்தள பஸ்களாகவும், மற்ற பஸ்களை சாதாரண பஸ்களாகவும் கொள்முதல் செய்ய நீதிமன்றம் கடந்த மே மாதம் உத்தரவிட்டது.

மேலும் தாழ்தள பஸ்கள் குறித்து அறிந்துக் கொள்ளும் வகையில் செயலியை உருவாக்கவும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து நீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாக கொண்டு தாழ்தள பஸ்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளது. அதில் 157 பஸ்களை தாழ்தள பஸ்களாக தனி டெண்டர் மூலம் கொள்முதல் செய்ய சாலை போக்குவரத்து நிறுவனம் முடிவு செய்து இதற்கான பணிகளை மேற்கொண்டது. இந்நிலையில் 6 போக்குவரத்து கழகங்களுக்கு 150 தாழ்தள பஸ்கள் கொள்முதல் செய்ய சாலை போக்குவரத்து நிறுவனம் சார்பில் தற்போது டெண்டர் விடப்பட்டுள்ளது.

இதில் கும்பகோணம் போக்குவரத்து கழகத்துக்கு அதிகபட்சமாக 38 பஸ்கள், மதுரைக்கு 33 பஸ்கள், விழுப்புரத்துக்கு 26 பஸ்கள், கோவைக்கு 20 பஸ்கள், நெல்லைக்கு 17 பஸ்கள், சேலத்துக்கு 16 பஸ்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளது. இந்த பஸ்களை மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும் என டெண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post 6 போக்குவரத்து கழகங்களுக்கு 150 பஸ்கள் கொள்முதல் செய்ய டெண்டர் வெளியீடு: சாலை போக்குவரத்து நிறுவனம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Road Transport Company ,Chennai ,Road Transport Corporation ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...