சென்னை: நூற்றாண்டு பழமையான ஹூமாயூன் மகால் புனரமைப்பு பணிக்கு பழமையான நடைமுறையை பொதுப்பணித்துறை பின்பற்ற முடிவு செய்துள்ளது.சென்னை எழிலகம் வளாகத்தில் 200 ஆண்டுகள் பழமையான கல்சா மகால் கடந்த 2012ல் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்தது. அப்போது, அருகில் இருந்த ஹூமாயூன் மகால் பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ₹19 கோடி செலவில் கல்சா மகால் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் 2014ல் ஹூமாயூன் மகால் கட்டிடத்தை புனரமைப்பு பணிக்கு பாரம்பரிய கட்டிட கோட்டம் சார்பில் அமைக்கப்பட்ட திட்ட அறிக்கை தயார் செய்யும் குழு ஹூமாயூன் மகால் சீரமைப்பதற்கு உண்டாகும் செலவு விவரங்களை திட்ட அறிக்கையாக தயார் செய்து அரசிடம் அளித்தது. அப்போது 38 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று கடந்தாண்டு டிசம்பரில் ஹூமாயூன் மகால் புனரமைப்பு பணிக்கு ₹36 கோடி நிதி ஒதுக்–்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி 33 கோடி புனரமைப்பு பணிக்கும் 3 கோடி மின்சாதன பணிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒப்பந்த நிறுவனம் சார்பில் ஹூமாயூன் மகாலில் உள்ள செடி, மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து கட்டிடங்களில் பலவீனமாக பகுதிகளை ஆய்வு செய்து, அந்த இடத்தை மட்டும் நீக்கி விட்டனர். ேமலும் கட்டிடத்தில் பூச்சுகள் அனைத்தையும் பெயர்த்து எடுத்தனர்.
தொடர்ந்து தற்போது அங்கு புனரமைப்பு பணிகள் தொடங்கும் வேலையில் பொதுப்பணித்துறையினர் ஈடுபடவுள்ளனர். இதற்காக, திருச்சியில் இருந்து மணல், தென்காசியில் இருந்து மலை சுண்ணாம்பு கல் கொண்டு வரப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த சுண்ணாம்பு மற்றும் அரைத்த மணல், கடுக்காய் கொட்டையில் தண்ணீர் மற்றும் வெல்லம் போட்டு 10 நாட்கள் புளிக்க வைக்கும் வகையில் ஊற வைக்கப்பட்டன.பின்னர் சோற்றுக்கற்றாழை, முட்டை வெள்ளை கருவை சுண்ணாம்பு, மணல் கலவை உடன் நன்றாக அரைக்க வேண்டும். இதற்காக, அரவை இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், இந்த இயந்திரத்தில் அரைத்தால் சரியாக பூச்சுக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், கடந்த காலத்தை போல் மாடுகளை கொண்டு வந்து அரைப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மாடுகள் மூலம் அரைத்தால் பூச்சு நன்றாக வரும் என்பதால் அதற்கான வேலை நடந்து வருகிறது. இந்த சுண்ணாம்பு மற்றும் மணல் கலவையில் ஊற்றி பூசினால் கட்டிடத்தில் பூச்சு நிலைத்து நிற்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.