×

மாவட்டங்களில் கணக்கெடுப்பு தமிழகத்தில் பழமையான 3470 கோயில்கள் கண்டுபிடிப்பு: அறநிலையத்துறை தகவல்

சென்னை: 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான 3470 கோயில்கள் கண்டறியப்பட்டு, அந்த கோயில்களில் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டின் கீழ் பெரும்பாலான கோயில்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில், அதிக வருவாய் மற்றும் சொத்துக்கள் உள்ள கோயில்கள் மட்டுமே அறநிலையத்துறை கையகப்படுத்தியுள்ளது.  அதே நேரத்தில் நூற்றாண்டு பழமையான கோயில்களை வருவாய் காரணம் காட்டி அதை கையகப்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நூற்றாண்டு பழமையான கோயில்கள் சிதிலமடைந்தும், அந்த கோயில்களில் ஒரு கால பூஜை  கூட நடைபெறாமல் உள்ளது. இது தொடர்பாக இந்து அமைப்புகள் அரசுக்கு தொடர்ந்து புகார் அளித்தனர்.

இதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் நூற்றாண்டு பழமையான கோயில்களை அறநிலையத்துறை கையகப்படுத்தும் பணியில் இறங்கியது. அவ்வாறு கண்டறியப்படும் பழமையான கோயில்கள் பட்டியலுக்குள் கொண்டு வந்து, அந்த  கோயில்களில் திருப்பணி செய்வது, தினசரி பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது.  இதற்காக, பழமையான கோயில்களை கணக்கெடுக்கும் பணியில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். அதன்படி 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோயில்கள் கணக்கெடுக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் 3470 கோயில்கள் பட்டியலில்  சேர்க்கப்பட்டுள்ளது.

 இதில், சென்னை மண்டலத்தில் 108 கோயில்கள், வேலூர் 311, சேலம் 77, கோவை 211, விழுப்புரம் 420, மயிலாடுதுறை 243, தஞ்சாவூர் 457, திருச்சி 492, மதுரை 190, சிவகங்கை 257, நெல்லை 704 கோயில்கள் என மொத்தம்  3407 கோயில்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த கோயில்கள் 3ம் நூற்றாண்டு, 5ம் நூற்றாண்டுகளை சேர்ந்த கோயில்கள் உட்பட 100 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட கோயில்கள் அனைத்தும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதில், வருவாய் வரும் கோயில்களில் இருந்து நிதி பெறப்பட்டு பழமையான கோயில்களுக்கு செலவு செய்யப்படுகிறது. இதற்காக வருவாய் வரும் கோயில்களுடன் இந்த கோயில்கள் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பழமையான கோயில்களை பாதுகாக்க முடியும் என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

Tags : Census ,Tamil Nadu ,Temples ,Oldest Temples , Census of Districts Discovery of 3470 Temples in Tamil Nadu
× RELATED தைரிய வீரத்திற்கு வீரமாகாளியம்மன்