×

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் மாற்றுத்திறனாளிகள், தொழுநோயாளிகள் போட்டியிட வாய்ப்பு: தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் பாராட்டு

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் மாற்றுத்திறனாளிகளும், தொழுநோயாளிகளும் போட்டியிடக்கூடிய நிலையை ஏற்படுத்தியிருக்கும் தமிழக அரசுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் மாற்றுத்திறனாளிகளும் போட்டியிடலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரியதாகும்.

அதாவது உள்ளாட்சித் தேர்தலில் வாய் பேச முடியாத, காது கேளாத மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடலாம் என தமிழக அரசு சட்டத்திருத்தம் செய்து அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தம் உடனடியாக அமலுக்கு வருவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தியானது தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பயனுள்ள செய்தியாக அமைந்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் மாற்றுத்திறனாளிகள், தொழுநோயாளிகள் போட்டியிட முடியாத நிலை இருந்து வந்தது. இந்த அரசாணையால் மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு சம உரிமையும், சம வாய்ப்புகளும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் செவித்திறனற்ற, வாய் பேச முடியாத மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இருக்கின்றனர்.

இவர்களில் ஏராளமானோர் உள்ளாட்சியில் மக்கள் பணியாற்ற ஆர்வத்துடன் இருப்பவர்கள் ஆகும். அவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைப்பது உறுதியாகிவிட்டது. இது தமிழக அரசின் தொடர் நல்லாட்சிக்கு மேலும் ஓர் எடுத்துக்காட்டான செயலாகும். குறிப்பாக மக்கள் பணியில் ஆர்வமுள்ள மாற்றுத்திறனாளிகள், பொது வாழ்வில் ஈடுபாடுள்ள மாற்றுத்திறனாளிகள் மக்கள் பணியாற்றுவதற்கு வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது.

இதனால் மாற்றுத்திறனாளிகள் தேர்தல் களத்தில் பணியாற்றி, வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றி, பயன் பெறுவார்கள் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு கிடைப்பதற்கு நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு தமாகா சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று வாசன் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Local Government Election ,government ,elections ,Tamil Nadu ,GK Vasan Appreciates Tamil Nadu Government Opportunities ,lepers ,GK Vasan , Tamil Nadu, Local Elections, Alternatives, Leprosy, Competition, Opportunity, Government of Tamil Nadu, GK Vasan
× RELATED மொத்தமுள்ள 37,553 அரசுப் பள்ளிகளில் 20,332...