×

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு ப.சிதம்பரம் நீதிமன்ற காவல் நவ.27ம் தேதி வரை நீட்டிப்பு: டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை தரப்பு கோரிக்கையை ஏற்றுக் கொண்ட சிபிஐ சிறப்பு நீதிமன்றம், ப.சிதம்பரத்திற்கு வரும் 27ம் தேதிவரை நீதிமன்ற காவலை நீட்டித்து நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ மற்றும் அமலாக்கத் துறையும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இதில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரம் ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு பின்னர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்ற சிபிஐ நீதிமன்றம், 7 நாட்கள் காவல் வழங்கி கடந்த மாதம் 18ம் தேதி உத்தரவிட்டது. விசாரணைக்கு பின்னர் அமலாக்கத்துறை கைது செய்த விவகாரத்தில் ப.சிதம்பரத்திற்கு நவம்பர் 13ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி சிபிஐ நீதிமன்றம் கடந்த 30ம் தேதி உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அவர் மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற காவல் நேற்றோடு முடிவடைந்ததால் அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த வேண்டும். ஆனால் ப.சிதம்பரம் தரப்பில் நீதிமன்றத்தில் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதில்,”உடல்நிலையை கருத்தில் கொண்டு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. இதையடுத்து ப.சிதம்பரம் நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.இதையடுத்து நீதிபதி உத்தரவில், “அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்கப்பட்டு ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்கள் அதாவது நவம்பர் 27ம் தேதிவரை நீட்டிக்கப்படுகிறது’’ என்று உத்தரவிட்டார்.அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராக ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் தொடர்ந்த வழக்கில் அடுத்த ஓரிரு நாட்களில் தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Tags : CBI ,UNX Media ,court , New Delhi,CBI court,probe UNX Media,scam case
× RELATED சீன விசா முறைகேடு தொடர்பாக...