×

ப.சிதம்பரம் மகன், மருமகள் மீதான வழக்கில் சாட்சியை மீண்டும் விசாரிக்க வருமான வரித்துறைக்கு அனுமதி: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ப.சிதம்பரத்தின் மகன் மற்றும் மருமகள் மீதான வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் அரசு சாட்சியை மீண்டும் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோருக்கு சொந்தமாக முட்டுகாடு அருகே இருந்த நிலத்தை அக்னி எஸ்டேட்ஸ் பவுண்டேசன் நிறுவனத்துக்கு 4.25 கோடிக்கு விற்றுள்ளனர். ஆனால் நிலத்தை 3 கோடி சந்தை மதிப்பில் பதிவு செய்துள்ளனர். மீதி தொகையான 1.25 கோடியை ஸ்ரீநிதி ரொக்கமாக வாங்கியுள்ளார். இதேபோல் கார்த்தி சிதம்பரம் 6.38 கோடி ரொக்கமாகவும், ஸ்ரீநிதி 1.35 கோடி ரொக்கமாகவும் வாங்கியுள்ளானர். ஆனால் இந்த பணத்தை அவர்கள் கடந்த 2014-15 ஆண்டு வருமான வரி கணக்கில் காட்டவில்லை.

இந்தநிலையில் கடந்த 2015ம் ஆண்டு வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் சேர்ந்து அட்வாண்டேஜ் ஸ்டேடர்ஜிக் கன்சல்டிங் என்ற நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அமலாக்கத்துறை  ஹார்ட்டிஸ்க் மற்றும் பென்டிரைவ் போன்றவற்றை கைப்பற்றினர். மேலும் பணம் பரிமாற்றம் தொடர்பாக சில ஆவணங்களும், ரொக்கமாக வாங்கியது தொடர்பாக சில டைரிகளும் கைப்பற்றினர். இதனைதொடர்ந்து வருமானவரித்துறை சென்னை எழும்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி சிதம்பரம் மீது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது கார்த்தி சிதம்பரம் எம்.பி யாக தேர்வானதால், வழக்கு சென்னை கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள, சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் 6 பேரிடம் விசாரணை முடிக்கப்பட்டது.

இந்தநிலையில் சோதனையின்போது அமலாக்கத்துறை கைப்பற்றிய ஹார்ட் டிஸ்க், பென்டிரைவ் உள்ளிட்ட ஆவணங்களை அரசு சாட்சி 1 ரோகன்ராஜ் மூலம், இந்த வழக்கில் இணைக்க வருமான வரித்துறை முடிவு செய்தது. அதற்கு கார்த்தி சிதம்பரம் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனைதொடர்ந்து சாட்சியை மீண்டும் விசாரித்து, ஆவணங்களை வழக்கில் குறிப்பிட அனுமதி கோரி வருமானவரித்துறை மனுதாக்கல் செய்தது. அதற்கு கார்த்தி சிதம்பரம் தரப்பு, அமலாக்கத்துறையிடம் உள்ள எலக்ட்ரானிக் ஆவணங்களை எப்படி இந்த வழக்கில் இணைக்க முடியும். மேலும் எலக்ட்ரானிக் ஆவணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் ஷீலா, எலக்ட்ரானிக் ஆவணத்தில் பணம் வாங்கியதற்காக ஆதாரங்கள் உள்ளது.

மேலும் எங்களிடம் வெறும் எலக்ட்ரானிக் ஆவணங்கள் மட்டுமே இல்லை. டைரி உள்ளிட்ட ஆவணங்களும் உள்ளது. எனவே சாட்சியை மீண்டும் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரினார்.  இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி டி.லிங்கேஷ்வரன், இந்த வழக்கில் சாட்சி ரோகன்ராஜை வருமானவரித்துறை மீண்டும் விசாரணைக்கு அழைத்து, விசாரணை மேற்கொள்ள அனுமதிப்படுகிறது. என்று கூறி வருமானவரித்துறை தாக்கல் செய்த மனுவை ஏற்க்கொண்டார்.

Tags : witness ,Income Tax department ,Chidambaram ,daughter-in-law ,Special Court of Income Tax Department , P. Chidambaram Son, Daughter, Income Tax Department, Special Court
× RELATED நிதி மோசடியை விசாரிக்க வருமான...