×

குருநானக் 550வது பிறந்தநாள்: சீக்கியர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து

புதுடெல்லி: சீக்கிய மத குருவான குரு நானக்கின் 550வது பிறந்தநாளை முன்னிட்டு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட  தலைவர்கள் சீக்கிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். சீக்கிய  மதத்தின் குருவான குரு நானக்கின் 550வது பிறந்த நாள், இந்தியா மட்டுமின்றி உலகம்  முழுவதும் உள்ள சீக்கிய மக்களால் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.  இதனையொட்டி, பஞ்சாப்பில் உள்ள குருத்வாராவில் இருக்கும் சுல்தான்பூர்  லோதியில் ஏராளமான சீக்கியர்கள் வழிபாடு நடத்தினர். இந்நிலையில்,  குரு நானக்கின் 550வது பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு கட்சிகளின்  தலைவர்கள் சீக்கிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: பஞ்சாபில் கபூர்தலா மாவட்டத்தில் உள்ள சுல்தான்பூர் லோதியில் நடந்த குருநானக் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ``குருநானக் நமது இதயங்களில் வாழ்கிறார். அவர் அனைவருக்கும் பொதுவானவர்.

அவர் மனித சமுதாயத்தின் வழிகாட்டியாவார். சமூக வேறுபாடுகளை ஒழிக்க அவரது சித்தாந்தங்களை பின்பற்ற வேண்டியது அனைவரின் கடமை. அவரது வாழ்வு, போதனைகள் மனித சமுதாயத்துக்கு அன்பு, பரிவு, சகோதரத்துவம், சமத்துவம் ஆகியவற்றை கற்று கொடுத்துள்ளது. அவர் பிறந்த இந்நன்னாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும், உலகின் மற்ற நாடுகளில் உள்ள சீக்கிய சகோதர, சகோதரிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’’என்று கூறினார். அமித் ஷா (பாஜ தலைவர்):  சீக்கிய  மரபில் தோன்றிய வணக்கத்துக்குரியவர் குரு நானக். இந்தியாவின் புனிதமான பாரம்பரியத்தின் சின்னமாக விளங்கியவர். அவருடைய போதனைகள், சமுதாயத்திற்கு  சேவையாற்ற வேண்டும் என்ற அவருடைய தீர்மானம் நமக்கு தூண்டுதலாக அமைந்துள்ளன.  குரு நானக்கின் சிந்தனை மற்றும் போதனைகளின் அடிப்படையில் மோடியின் அரசு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது.

சோனியா காந்தி (காங். தலைவர்): `500 ஆண்டுகளுக்கு முன்பே கூறப்பட்ட குரு நானக்கின் போதனைகள் இன்றைய கால  கட்டத்திற்கும் பொருத்தமானவை. அமைதியுடனும் சமாதானத்துடனும் வாழ, உலக  மக்கள் அவரது போதனைகளை பின்பற்ற வேண்டும். இன்றைய நாளில் இந்தியா, உலகம்  முழுவதிலும் உள்ள சீக்கிய மத சகோதர, சகோதரிகளுக்கு குரு நானக்கின் 550வது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
ராகுல்  காந்தி: குரு நானக்கின் 550வது பிறந்தநாளில்  அனைவருக்கும் வாழ்த்துகள். குரு நானக் பிறந்த நன்னாளில்  லட்சோப லட்சம் வாழ்த்துக்கள்.

Tags : Birthday ,Sikhs ,Guru Nanak ,Leaders , Guru Nanak, greet the leaders
× RELATED லண்டன் இந்திய தூதரகம் மீது தாக்குதல்:...