×

ஒரே குடும்பத்தில் 3 பேர் அடுத்தடுத்து தற்கொலை: கள்ளக்காதலால் சிதைந்த பரிதாபம்

மார்த்தாண்டம்: கன்னியாகுமரி  மாவட்டம் மார்த்தாண்டம் அருகே முளங்குழி பகுதியை சேர்ந்தவர் அம்புறோஸ்  (59). விவசாயி. இவர் நெல்வேலி பகுதியில் ஒரு கடையும் நடத்தி வந்தார்.  இவரது மனைவி ஸ்டெல்லா பாய் (52). இந்த  தம்பதியின் மகன் செந்தில்குமார்  (25). கேபிள் டிவி ஆபரேட்டராக இருந்தார். கடந்த சில வருடத்துக்கு முன்பு  விரிவிளை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு  மகன் உண்டு. திருமணம் ஆன சில  மாதங்களிலேயே மாமியார்-மருமகள் இடையே பிரச்னை உருவானது. அதோடு செந்தில்குமாருக்கு மது  குடிக்கும் பழக்கமும் இருந்துள்ளது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி  தகராறு ஏற்படத் தொடங்கியது. இதனிடையே  செந்தில்குமார் மனைவிக்கு அதே பகுதியை சேர்ந்த கொத்தனார்  ஒருவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டு அவருடன் சென்றுவிட்டார்.

இதையடுத்து, மனைவியை பலமுறை வீட்டுக்கு அழைத்தும் வரவில்லை. இதை நினைத்து மனமுடைந்த செந்தில்குமார் ஒரு  வருடத்துக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அதன்பிறகு செந்தில்குமாரின் மனைவி தனது   குழந்தையை தாத்தா, பாட்டியுடன் பேச வைத்துள்ளார். மகன் இறந்தாலும் பேரன்  பேசுவதால் மகிழ்ச்சியுடன் இருந்தார் அம்புரோஸ். நாற்கர சாலை  திட்டத்துக்கு விவசாய நிலத்தை வழங்கியதற்காக  அவருக்கு அரசு சார்பில் ரூ.15 லட்சம்  கிடைத்தது. அதை பேரன் பெயரில் டெபாசிட் செய்து மருமகளிடமும் கொஞ்ச பணம் கொடுத்தார். ஆனால் ஸ்டெல்லா, மகன் சாவுக்கு மருமகள்தான்  காரணம். இப்படி இருக்கும்போது பணத்தை எப்படி  கொடுக்கலாம் என்று  தகராறு செய்ய  தொடங்கினார். இதனால் அவர்களுக்குள் தினமும் சண்டை நடந்தது.

இதில் மனம் உடைந்த  அம்புறோஸ் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு விஷம் குடித்து  தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஸ்டெல்லா மனம் உடைந்தார். தினமும் கணவர் கல்லறைக்கு சென்று கதறி அழுதுள்ளார். இந்தநிலையில்  நேற்றுமுன்தினம் மாலை அம்புறோஸ் கல்லறைக்கு சென்ற அவர் விஷம் குடித்து  தற்கொலை செய்து கொண்டார். பாச  போராட்டம் நடத்திய குடும்பம் கள்ளக்காதலால் உருக்குலைந்து விட்டது என்று  அந்த பகுதி மக்கள் வேதனையுடன்  தெரிவித்தனர். 


Tags : Single family, 3 people suicide, counterfeiting
× RELATED நெரிசலை குறைக்க குன்னூர் செல்லாமல்...