×

நீட் ஆள்மாறாட்டத்தை தடுக்க சேர்க்கையின்போதே ஏன் கைரேகை பெறக்கூடாது? : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: நீட் ஆள்மாறாட்டதை தடுக்க மருத்துவ மாணவர் சேர்க்கையின் போது மாணவர்களின் கைரேகையை ஏன் பெற கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நீட் ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது,  நீட் ஆள்மாறாட்டம் தொடர்பாக புகார் பெறப்பட்டுள்ளதா என்று சிபிஐ பதிலளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், கடந்த முறை வழக்கு விசாரணையின் போது மருத்துவர்களின் ஊதியத்தை கல்லூரி பேராசிரியர்கள் ஊதியத்தோடு தான் ஒப்பிட்டு கூறினோம். பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்துடன் ஒப்பிடவில்லை. அவர்கள் 20 ஆயிரம், 30 ஆயிரம் என்றுதான் வாங்குகிறார்கள் என்றனர்.
சிபிஐ வக்கீல் சீனிவாசன் ஆஜராகி, நீட் ஆள்மாறாட்டம் தொடர்பாக சென்னை மண்டலத்திலிருந்து 2 புகார்களும், கேரள மாநிலம் கொச்சியில் இருந்து ஒரு புகாரும் சிபிஐக்கு வந்துள்ளது. இந்த புகார்கள் மத்திய சுகாதாரத்துறை மற்றும் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றார்.

சிபிசிஐடி சார்பில் ஆஜரான வக்கீல், பாலாஜி மருத்துவக் கல்லூரியில் 2 மாணவர்கள், செட்டிநாடு மருத்துவக்கல்லூரியில் 2 மாணவர்கள், சத்தியசாய் மருத்துவ கல்லூரியில் 6 மாணவர்கள், எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரியில் 2 மாணவர்கள், ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் 1 மாணவன், மீனாட்சி மிஷன் மருத்துவ கல்லூரியில் 3 மாணவர்கள் என 16 மாணவர்களின் கைரேகை பெறப்படவில்லை. மேலும், தேசிய தேர்வு முகமையிடம் இருந்து பெறப்பட்ட 7000 மருத்துவ  மாணவர்களின் கைரேகையை ஒப்பிட்டு பார்க்க 90 நாட்கள் ஆகும் என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், மாணவர்களின் கைரேகையை ஒப்பிட்டு பார்க்க 90 நாட்கள் கால அவகாசம் வழங்க முடியாது. இரண்டு வார காலத்திற்குள் கைரேகையை ஒப்பிட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தை தடுக்க அடுத்த ஆண்டு முதல் மாணவர்களின் சேர்க்கையின் போது மாணவர்களின் கைரேகையை  பெறுவது குறித்து மருத்துவ கல்வி இயக்குனரகம் விளக்கமளிக்க வேண்டும்.

ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பெயர்களும் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால், தேர்வு குழு சார்பில் ஆஜரான வக்கீல், ஆள் மாறாட்டம் செய்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுவிட்டது என்று கூறியுள்ளார். எனவே, இந்த வழக்கில் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தையும் சேர்க்குமாறு உத்தரவிடுகிறோம் என்று உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : government ,Need Impersonation ,High Court ,Tamil Nadu , Fingerprint , combine to prevent, Need Impersonation? ,High Court , Tamil Nadu government
× RELATED சென்னை கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில்,...