×

தடை இருக்கும் நிலையில் வடசென்னையில் ஜரூராக தயாரிக்கப்படும் மாஞ்சா நூல்: களையெடுக்குமா காவல்துறை

சென்னை: மாஞ்சா நூல் விற்பதற்கு தடை நீடிக்கும் நிலையில் ரகசிய இடத்தில் வைத்து சில நூறு ரூபாய் லாபத்துக்காக தயாரிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதை தடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், காசிமேடு, புதுவண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை ஆகிய பகுதிகளில் காற்றாடி விடுபவர்கள் மற்றும் காற்றாடி விற்றவர்கள் தொடர்பாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் பலருக்கு காற்றாடி பறக்க விடும் ஆசை போகவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் காத்தாடி விற்றும் பறக்க விட்ட நபர்கள், ‘தாங்கள் ஆன்லைனில்தான் காற்றாடி மற்றும் நூல்கள் வாங்கியதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்திருந்தனர். போலீசாரின் விசாரணையிலும், ஆன்லைனில் விற்கப்படும் 10ம் எண் நூல் தான் காற்றாடி விட பயன்படுத்தப்பட்டு வந்ததும், அந்த நூல் மாஞ்சா நூலை போல மனித உடலை வெட்டும் தன்மையுடையது எனவும் கூறப்படுகிறது.

வடசென்னை சரகம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தி 52 காற்றாடிகள் மற்றும் மாஞ்சா நூல் கண்டுகளை பறிமுதல் செய்தனர். காற்றாடி மற்றும் மாஞ்சா நூல்களை விற்பனை செய்தாலும், காற்றாடி பறக்க விட்டாலும் குண்டர் சட்டம் பாயும் என்ற நிலையில் மீஞ்சூர் மற்றும் புரசைவாக்கம் பகுதியில் மாஞ்சா நூல் தயாரிப்பு மையங்கள் செயல்படுவது  கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் வடசென்னை மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காற்றாடி மாஞ்சா நூல் அறுத்து சிறுவன் இறந்ததை தொடர்ந்து மாஞ்சா நூல் தயாரிக்கப்படுகிறதா என்ற கண்ணோட்டத்தில் வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் சுப்புலட்சுமி தலைமையிலான 5 பேர் கொண்ட தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், சென்னை நகருக்குள் குறிப்பாக வடசென்னை பகுதிக்குள் இயங்கி வந்த மாஞ்சா நூல் தயாரிப்பு மையங்கள் புறநகர் பகுதியான திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர், பொன்னேரி பகுதியில் மாஞ்சா நூல்களை தயாரித்து வடசென்னை பகுதியில் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.

தகவலறிந்து தனிப்படை போலீசார் மீஞ்சூர் அத்திப்பட்டு வ.உ.சி.நகர் பகுதியில் இயங்கி வந்த காற்றாடி மற்றும் மாஞ்சா நூல் தயாரிக்கும் மையத்தை கண்டுபிடித்து அங்கிருந்த 1500 காற்றாடிகள் மற்றும் 35 மாஞ்சா நூல் கண்டுகள் மற்றும் மாஞ்சா நூல் தயாரிக்கும் உபகரணங்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் புரசைவாக்கம் எஸ்.எஸ்.புரம் பகுதியில் இயங்கி வந்த மாஞ்சா நூல் தயாரிப்பு மையத்தை அப்பகுதி போலீசார் கண்டறிந்து அங்கிருந்து 10 காற்றாடிகள், 17 மாஞ்சா நூல் கண்டுகள் ஆகியவை பறிமுதல் செய்து அதனை தயாரித்த ஆட்டோ டிரைவரான கர்ணா என்பவரை தேடிவருகின்றனர். மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து சிறுவன் இறந்தும் ஆன்லைன் மூலமாகவே காற்றாடிகள் மற்றும் ஆபத்தை விளைவிக்கும் மாஞ்சா நூல்கள் விற்கப்படுவதாக தகவல்கள் இருந்து வந்த நிலையில் தற்போது மாஞ்சா நூல் தயாரிப்பு மையங்கள் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் வடசென்னை பகுதிவாசிகள் மட்டுமில்லாமல் போலீசாரிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண லாபம் மற்றும் சுயநல நோக்கத்திற்காக இதுபோன்று உயிரை கொல்லும் மாஞ்சா நூல்களை தயார் செய்பவர்களை காவல் துறை களை எடுக்குமா? மேலும் இதுபோல் இனி வடசென்னை பகுதியில் உயிர் பலி ஏற்படாமல் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Tags : North Chennai ,janrakka ,Weedyarukkuma ,Prohibition Juruga Mancha , prohibition, Juruga Mancha,North Chennai
× RELATED சென்னையில் ஆம்புலன்ஸ் செவிலியரை கடித்த விஷப்பூச்சி!!