சென்னை: நிரஞ்சன் மார்டி ஓய்வு பெறுவதால், புதிய உள்துறைச் செயலாளர் பதவிக்கு கடுமையான போட்டி நிலவுகிறது. பல அதிகாரிகள் களத்தில் குதித்துள்ளதால் அதிகாரிகள் மட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக உள்துறைச் செயலாளராக இருப்பவர் நிரஞ்சன் மார்டி. இவர், இந்த மாதம் 30ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதனால் உள்துறைச் செயலாளர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. உள்துறைக்கு கீழ்தான், போலீஸ்துறை, போக்குவரத்து துறைகள் வருகின்றன. இதனால் இந்தப் பதவியை கவுரவமாக கருதுவார்கள். தலைமைச் செயலாளருக்கு அடுத்த இடத்தில், உள்துறைச் செயலாளர் பதவி முக்கிய அதிகாரமிக்க பதவியாக பார்க்கப்படுகிறது.எனவே, இந்த பதவியைப் பிடிக்க தற்போது முதல்வரின் செயலாளராக உள்ள செந்தில்குமார், விவசாயத்துறை செயலாளராக உள்ள ககன் தீப் சிங் பேடி, கல்வித்துறைச் செயலாளர் பிரதீப் யாதவ், சமூக நலத்துறை செயலாளராக உள்ள தயானந்த் கட்டாரியா மற்றும் தர்மேந்திர பிரதாப் யாதவ் ஆகியோர் தீவிரமாக முயன்று வருகின்றனர். அதில் செந்தில்குமார், மேற்கு மண்டலத்தைச் சேர்ந்தவர். முதல்வரின் உறவினர் என்று கூறப்படுகிறது.
மற்றவர்கள் ஒவ்வொருவரும் அமைச்சர்கள் மற்றும் தற்போதைய தலைமைச் செயலாளர் சண்முகத்தின் உதவியுடன் உள்துறைச் செயலாளர் பதவியைப் பிடிக்க தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.இந்த மாத இறுதியில் பட்டியல் தயாரிக்கப்பட்டு முதல்வருக்கு அனுப்பப்படும். அதன்பின்னர் புதிய உள்துறைச் செயலாளர் நியமிக்கப்படுவார். இதனால் தற்போது உள்துறைச் செயலாளர் பதவியில் யார் அமருவார்கள் என்ற பரபரப்பு போலீஸ் துறையிலும், ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டத்திலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.