×

ஆசியான் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் இந்தியாவுக்கு மரண அடி விழும்: மத்திய அரசுக்கு சோனியா எச்சரிக்கை

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட கூட்டம், டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் நேற்று நடந்தது. இதில், கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பேசியதாவது: நாட்டில் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது. இதை ஒப்புக் கொள்ளாமல் தலைப்புச் செய்திகளில் இடம் பெறுவதிலும், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதிலும் பிரதமர் மோடி தீவிரமாக இருக்கிறார். இந்திய பொருளாதாரம் முற்றுகைக்கு உள்ளான நிலையை பார்க்கும்போது, வேதனை அளிக்கிறது. இதை அரசு முற்றிலும் மறுப்பது இன்னும் கவலை தருகிறது. இது போதாது என்று, தற்போது 16 நாடுகள் இடையே தடையில்லா வர்த்தகம் நடைபெறுவதற்கான பிராந்திய பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் (ஆர்சிஇபி) கையெழுத்திட மத்திய அரசு தயாராக இருக்கிறது.

இது விவசாயிகள், வியாபாரிகள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இந்திய பொருளாதாரத்துக்கு மரண அடி விழும். ‘பெகாசஸ்’ என்ற இஸ்ரேலின் உளவு ெமன்பொருளை மோடி அரசு வாங்கி, பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் வாட்ஸ் அப் தகவல்களை உளவு பார்த்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது சட்ட விரோதம், அரசியல் அமைப்புக்கு எதிரானது, வெட்கக்கேடானது. பணமதிப்பிழப்பு, குழப்பமான ஜிஎஸ்டி மற்றும் அதை தொடர்ந்து எடுக்கப்பட்ட பொருளாதார முடிவால் 90 லட்சம் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளது என்றார்.

பிரணாப்பை உளவு பார்த்தது யார்?: பாஜ
சோனியாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து, பாஜ செயல் தலைவர் ஜேபி நட்டா நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், `வாட்ஸ் அப் உளவு  விவகாரம் பற்றி மத்திய அரசு ஏற்கனவே விளக்கம் அளித்துவிட்டது. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, ராணுவ தளபதி வி.கே.சிங்கை உளவு பார்க்க உத்தரவிட்டது யார் என்பதை சோனியா  தெரிவிக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

Tags : Sonia ,India ,government ,ASEAN , India, Central Government, Sonia
× RELATED இட ஒதுக்கீட்டை மேம்படுத்தும்...