×

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் வெற்றி பெற்ற புதிய அதிமுக எம்எல்ஏக்கள் பதவியேற்றனர்: சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்

சென்னை: தமிழகத்தில் காலியாக இருந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 21ம் தேதி நடைபெற்றது.  இந்த இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் முத்தமிழ்செல்வன் மற்றும் நாராயணன் ஆகியோர் வெற்றி பெற்றனர். இந்த வெற்றியை அடுத்து கடந்த 29ம் தேதி இவர்கள் இருவரும் எம்எல்ஏக்களாக பதவியேற்க இருந்தனர். ஆனால், அன்றைய தினம் திருச்சி, மணப்பாறை அருகில் உள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்க தீவிர போராட்டம் நடைபெற்றது.  இதனால் எம்.எல்.ஏக்களின் பதவியேற்பு விழா ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் இரண்டு எம்.எல்.ஏக்களும் பதவி ஏற்கும் வகையிலான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. அதன்படி, இருவருக்கும் சபாநாயகர் தனபால் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் இருவரும் எம்எல்ஏக்களாக பதவியேற்றனர். பின்னர், இரு எம்எல்ஏக்களும் முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர். முன்னதாக, மெரினாவில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். இதையடுத்து சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது.


Tags : Vikravandi ,AIADMK ,Speaker ,constituency ,Nankuneri , AIADMK MLA,Vikravandi, Nankuneri
× RELATED விக்கிரவாண்டி சட்டமன்ற...