×

தீபாவளி சீட்டு நடத்தி 2 கோடி மோசடி: தலைமறைவான தம்பதிக்கு வலை

புழல்: செங்குன்றம் அருகே காந்திநகரை சேர்ந்தவர்கள் ஆனந்த் -சாந்தி தம்பதி. இவர்கள் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்களிடம் கடந்த 5 ஆண்டுகளாக தீபாவளி சீட்டு நடத்தி வந்துள்ளனர். நபர் ஒருவருக்கு மாதம் 200, 300, 500 முதல்  1000 ரூபாய் வரை 12 மாதங்கள் வசூலித்து தீபாவளி பண்டிகையின் போது தங்க நகை, பட்டாசு, இனிப்பு வழங்குவதாக கூறி சுமார் 300 பேரிடம் பணம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களிடம் பணம் கட்டியவர்கள் தீபாவளி பண்டிகை  வரை காத்திருந்தும் பொருட்கள் கிடைக்காததால் அவர்களது வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது வீடு பூட்டப்பட்டு, தலைமறைவாகி இருவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை மாநகர  காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அங்கு அது தங்களது எல்லை கிடையாது, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் செய்யுங்கள் என்று கூறி உள்ளனர்.

பிறகு திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அங்கும் சோழவரம் காவல் நிலையம் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டதின் பேரில் சோழவரம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார்  அளித்தனர். அதில், தீபாவளி சீட்டு நடத்தி பணத்தை திருப்பி தராமல் தலைமறைவான தம்பதியரை கண்டுபிடித்து அவர்களிடம் இருந்து பணத்தை மீட்டு தர வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். இதையடுத்து, தலைமறைவான தம்பதியை  போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Diwali , Diwali slip, fraud, couple
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...