சென்னை: புதுவண்ணாரப்பேட்டையில் பெட்ரோல் திருடும் கும்பலை அப்பகுதியினர் பிடித்து தர்மஅடி கொடுத்ததால் ஆத்திரம் அடைந்த திருட்டு கும்பல், தங்களை தாக்கியவர்களின் வீடுகள் மற்றும் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி அட்டூழியத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக, மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். வடசென்னை பகுதிகளான புதுவண்ணாரப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, ராயபுரம், காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே இரவு நேரங்களில் வீட்டு வாசலில் நிறுத்தப்படும் வாகனங்களில் பெட்ரோல் திருடப்பட்டு வந்தது. இதுகுறித்து இந்த பகுதி மக்கள் பலமுறை காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர்.
அந்த கும்பலை காவல் துறையும், பொதுமக்களும் தேடிவந்தனர். இந்நிலையில், புதுவண்ணாரப்பேட்டை ஏ.இ.கோயில் தெரு, மேற்கு மாடவீதி பகுதியில் தீபாவளியன்று இரவு 4 பேர் கொண்ட கும்பல் வீடுகள் முன்பு நிறுத்தப்பட்ட வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருடும் போது அப்பகுதி மக்கள் கையும், களவுமாக அவர்களை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பெட்ரோல் திருடும் கும்பல் நேற்று முன்தினம் இரவு புதுவண்ணாரப்பேட்டை மேற்கு மாடவீதி பகுதிக்கு வந்து பெட்ரோல் குண்டுகளை வீடுகள் மற்றும் வண்டிகள் மீது சரமாரியாக வீசினர். கார், பைக் ஆகியவைகளை அடித்து நொறுக்கினர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அவர்களை பிடிக்க வந்த போது, அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.
இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை பகுதி மக்கள் அளித்த புகாரின்படி, சம்பவ இடத்துக்கு போலீசார் வந்து விசாரணை நடத்தினர். அதில், பெட்ரோல் திருடும் கும்பலை சேர்ந்தவர்கள் வஉசி நகரில் வசிப்பதாக தெரியவந்தது. மேலும் கடந்த 2 மாதத்துக்கு முன்பு பைக், ஆட்டோ ஆகியவைகள் நள்ளிரவில் தீப்பற்றி எரிந்தது. அதற்கு காரணமும் இந்த பெட்ரோல் திருடும் கும்பல்தான் என தெரியவந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
பெட்ரோல் குண்டுகளை வீசிய மர்ம நபர்களை போலீசார் புகாரின் பேரில் வலை வீசி தேடிவருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் இரவு நேரத்தில் வீட்டுக்கு வெளியில் நிறுத்தப்படும் வாகனங்களில் பெட்ரோல் திருட்டு அடிக்கடி நடக்கிறது. அவர்களை தட்டிக்கேட்டால் அரிவாளை காட்டி மிரட்டுகின்றனர். தட்டிக்கேட்ட சிலரை வெட்டியும் உள்ளனர். 2 மாதங்களுக்கு முன்பு வஉசி நகர் பகுதியில் திடீரென இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் தீப்பற்றி எரிந்தது. அதற்கும் பெட்ரோல் திருடும் கும்பல்தான் காரணம். நாங்கள் அச்சமின்றி வாழ பெட்ேரால் திருடும் ரவுடி கும்பலை கைது செய்யவேண்டும்” என்றனர்.