×

இந்தியாவுக்கு காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்க எம்பி.க்கள் அடுத்தடுத்து குடைச்சல்: வெளிநாட்டு பத்திரிகையாளர்களை அனுமதிக்க கடிதம்

வாஷிங்டன்: ‘காஷ்மீருக்குள் செல்ல வெளிநாட்டு பத்திரிக்கையாளர்களையும், அமெரிக்க எம்பி.க்களையும் அனுமதிக்க வேண்டும்,’ என இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதருக்கு அமெரிக்க எம்.பி.க்கள் 6 பேர் கடிதம் எழுதியுள்ளனர். காஷ்மீரில் அரசியல் கைதிகளை  இந்தியா உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும், காஷ்மீரில் அரசியல், பொருளாதார ரீதியான இயல்புநிலை  திரும்புவதற்காக திட்டத்தை இந்தியா தெரிவிக்க வேண்டும் எனவும் தெற்கு மற்றும் மத்திய  ஆசிய பகுதிக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை இணையமைச்சர் பொறுப்பு வகிக்கும்  ஆலிஸ் ஜி வெல்ஸ் வாஷிங்டனில் நேற்று முன்தினம்அளித்த பேட்டியில் கூறியிருந்தார். மேலும், பாதுகாப்பு காரணங்கள் கருதி காஷ்மீருக்குள் செல்ல வெளிநாட்டு பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த விஷயத்தில் சர்வதேச பத்திரிக்கையாளர்களின் பங்கு மிக முக்கியம் என குறிப்பிட்டிருந்தார்.
 
இந்நிலையில், காஷ்மீருக்குள் வெளிநாட்டு பத்திரிக்கையாளர்களையும், அமெரிக்க எம்பி.க்கள் குழுவையும் செல்ல அனுமதிக்க வேண்டும் என அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹர்ஸ் வர்தன் ஸ்ரிங்லாவுக்கு, அமெரிக்க எம்பி.க்கள் டேவிட் சிசிலினே, தினா டிடஸ், கிரிஸ்சி ஹவுலகன், ஆண்டி லெவின், ஜேம்ஸ் மெக்கோவர்ன் மற்றுமு் சூசன் வைலட் ஆகியோர் கடிதம் எழுதியுள்ளனர். காஷ்மீர் நிலவரம் குறித்து அமெரிக்க எம்பி.க்கள் குழுவினருக்கு ஹர்ஸ் வர்தன் கடந்த 16ம் தேதி விளக்கம் அளித்திருந்தார். ஆனால், அந்த தகவலும், காஷ்மீர் பற்றி வெளியாகும் தகவலும் முரண்பாடாக உள்ளது என அவர்கள் கூறியுள்ளனர். சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது, தொலைத் தொடர்பு சேவை மற்றும் இன்டர்நெட் சேவை கவலை அளிப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

‘காஷ்மீர், லடாக்கிற்கு சம அளவில் பயன்கள்’
மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஜம்மு காஷ்மீரும், லடாக்கும் அடுத்த வாரம் முதல் புதிய யூனியன் பிரதேசங்களாக செயல்பட உள்ளன. இவற்றுக்கு எந்த பாகுபாடுமின்றி சம அளவிலான பயன்கள் கிடைக்கும். கடந்த 70 ஆண்டுகளாகவே, இங்குள்ள சில பகுதிகளும், மக்களும் பாரபட்சமாக உணர்கின்றனர். காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்குத்தான் அதிக சலுகைகள் செல்கின்றன என ஜம்மு பகுதியினர் எப்போதும் குறை கூறினார்கள். லடாக் பகுதி மக்களும் இதே நிலையில்தான் இருந்தனர். 31ம் தேதிக்குப்பின் உயர் கல்வி, தொழிற்சாலை, வாழ்வாதார வாய்ப்புகள் அனைவருக்கும் சரிசமமான அளவில் கிடைக்கும்,’’ என்றார்.

83வது நாளாக பாதிப்பு
காஷ்மீரில் இயல்புநிலை திரும்ப பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும், அங்கு கடைகள் இன்னும் முழுமையாக திறக்கப்படவில்லை. முக்கிய சந்தைகள் நேற்றும் மூடிய நிலையில் இருந்தன. லால் சவுக் உட்பட சில பகுதிகளில் காலையில் மட்டும் சில கடைகள் திறந்து இருந்தன. ஆனால் காலை 11 மணிக்கு கடைகள் மூடப்பட்டன. இந்த கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தன. தனியார் வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்துள்ளது. சில இடங்களில் ஆட்டோக்கள், டாக்சிகள் ஓடின. ஆனால், அரசு பஸ்கள் இயங்கவில்லை. காஷ்மீரில் 83வது நாளாக நேற்றும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையிலேயே இருந்தது.

Tags : MPs ,US ,journalists ,Kashmir ,India , US MP,succession, Kashmir, Letter ,journalists
× RELATED மக்களவை தேர்தலில் வெற்றி...