×

பட்டேல் பிறந்தநாளை முன்னிட்டு அக்.31ல் தேசிய ஒருமைப்பாட்டு தினம் கொண்டாட வேண்டும் : உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி சுற்றறிக்கை

சென்னை: சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளை முன்னிட்டு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் தேசிய ஒருமைப்பாட்டு தினத்தை கொண்டாடுமாறு யுஜிசி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினம் அக்டோபர் 31. கடந்த ஆண்டு இதே நாளில் சர்தார் சரோவர் அணையில் பிரதமர் மோடி சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை திறந்து வைத்தார். இதற்கு 3,000 கோடி செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது. வளரும் நாடான இந்தியாவில் இவ்வளவு செலவு செய்து சிலை வைக்க வேண்டுமா என்று பரவலாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டே சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை தேசிய ஒருமைப்பாடு தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அக்டோபர் 31ம் தேதியை தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாடுமாறு பல்கலைக்கழக நிர்வாகங்கள், கல்லூரி முதல்வர்களுக்கு பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:தேசிய ஒருமைப்பாடு தினத்தில் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியை நடத்த வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் பங்கேற்கும் தேசிய ஒருமைப்பாடுக்கான மாரத்தான் ஓட்டப்போட்டி நடத்த வேண்டும். மாலையில் தேசிய ஒருமைப்பாட்டு பேரணி நடத்த வேண்டும்.

தேசிய ஒருமைப்பாட்டுக்காக உழைத்தவர்களை அங்கீகரிக்க மத்திய அரசு சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய ஒருமைப்பாட்டு விருதை அறிவித்துள்ளது.  www.nationalunityawards.mha.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள வடிவத்தில் தேசிய ஒருமைப்பாட்டுக்கான விருதுக்கு பரிந்துரைகளை அனுப்பலாம். உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் மாணவர்கள் தேசிய ஒருமைப்பாட்டு தினத்தை கொண்டாட பல்கலைக்கழகம், கல்லூரி நிர்வாகங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். கல்வி நிறுவனங்களில் தேசிய ஒருமைப்பாட்டு தினம் கொண்டாடப்பட்டது தொடர்பாக வீடியோக்கள், புகைப்படங்களை யுஜிசியின் யுனிவர்சிட்டி ஆக்டிவிட்டி மானிட்டரிங் போர்டலில் (யுஏஎம்பி) http://www.ugc.ac.in/uamp என்ற இணையதளத்தில் நவம்பர் 1ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரசு தலையீடு


கடந்த ஆண்டு செப்டம்பர் 29ம் தேதியை சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினமாக கொண்டாடுமாறு பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவிப்பு வெளியிட்டது. இதனால் மத்திய அரசு, உயர்கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டில் தலையிடுவதாக அப்போது குற்றச்சாட்டு எழுந்தது. அதைத்தொடர்ந்து சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினத்தை கொண்டாடுங்கள் என்று தெரிவித்தோம். ஆனால், அது கட்டாயம் அல்ல என்று அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் தேசிய ஒருமைப்பாட்டு தினத்தை கொண்டாடுமாறு யுஜிசி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Tags : birthday ,National Integration Day Patel , Patel's birthday,celebrated, October 31
× RELATED அன்புமணியால்தான் பாஜவுடன் கூட்டணி: ராமதாஸ் விரக்தி