×

வேடந்தாங்கலில் வெளிநாட்டு பறவைகள் வரத்து குறைந்துள்ளதால் முதல்முறையாக பட்டாசு வெடிக்கும் கிராம மக்கள்

காஞ்சிபுரம்: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் இல்லாததால் சுற்றுவட்டார கிராம மக்கள் முதல் முறையாக பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடப்போவதாக அறிவித்துள்ளனர். வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் ஆண்டுதோறும் நவம்பர் முதல் ஜூன் வரை பொதுமக்கள் பார்வைக்காக திறந்திருக்கும். இந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் வேடந்தாங்கல் ஏரி முழுமையாக நிரம்பவில்லை. இதனால் இந்த ஆண்டு சரணாலயத்திற்கு வெளிநாட்டு பறவைகளின் வருகை வெகுவாக குறைந்துள்ளது. வழக்கமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வரும் சூழலில் தற்போது 50க்கும் குறைவான பறவைகளே காணப்படுகின்றன. இதனை தொடர்ந்து இனப்பெருக்கத்திற்காக வரும் வெளிநாட்டு பறவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்ற எண்ணத்தில் அப்பகுதி மக்கள் தீபாவளியின் போது பட்டாசுகள் வெடிப்பதையே தவிர்த்து வந்தனர்.

தற்போது பறவைகள் இல்லாததால் வேடந்தாங்கல் கிராம மக்கள் தீபாவளிக்கு பட்டாசுகள் வெடித்து கொண்டாட உள்ளதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து அங்குள்ள மக்கள் தெரிவித்ததாவது, ஒவ்வொரு வருடமும் தாங்கள் பறவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக தீபாவளி பண்டிகையை தவிர்த்து வந்ததாகவும், தங்களுடைய குழந்தைகள் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதத்தில் வெளி ஊர்களுக்கு அனுப்பி வந்ததாகவும் தெரிவித்தனர். தற்போது பருவமழை இல்லாததால் பறவைகள் வரத்து குறைந்து விட்டதாகவும், ஆதலால் இந்த வருட தீபாவளி பண்டிகையை தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து தங்கள் கிராமத்திலேயே கொண்டாட முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் முதல் முறையாக தீபாவளி பண்டிகையை வெடி வைத்து கொண்டாடுவதால் தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Residents ,Vedanthangal , Vedanthangal, birds, lowers, fireworks, villagers
× RELATED ஆந்திராவில் ஊருக்குள் புகுந்த 70...