×

தாம்பரம் அருகே பிரபல நகைக்கடையின் ஷட்டர் கதவு தானாகப் பூட்டிக் கொண்டதால் பல மணி நேரம் சிக்கிய ஊழியர்கள்: ஷட்டரை வெட்டி மீட்பு

சென்னை: தாம்பரம் அருகே பிரபல நகைக்கடையின் ஷட்டர் கதவு தானாகப் பூட்டிக் கொண்டதால் உள்ளே ஊழியர்கள் சிக்கிக்கொண்டனர். தீயணைப்புத் துறையினர் ஆள் நுழையும் அளவு ஷட்டரை வெட்டி ஊழியர்களை மீட்டனர். தாம்பரத்தை அடுத்த செம்பாக்கத்தில் தனிஷ்க் என்கிற பிரபல தங்க, வைர நகைக்கடை உள்ளது. தானாக இயங்கும் தானியங்கி ஷட்டர், எலக்ட்ரானிக் வகை பூட்டுகள் என இந்தக்கடையில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் உள்ளது. நேற்று வார இறுதி மற்றும் தீபாவளி நேரம் என்பதால் அதிக கூட்டம் இருந்தது.

வாடிக்கையாளர்கள் சென்ற பின் இரவு 10 மணியளவில் ஊழியர்கள் கிளம்ப ஆயத்தமானார்கள். கணக்குகள் முடிக்கும் நேரம் வாடிக்கையாளர்களை அனுமதிக்காமல் இருக்க பாதி அளவுக்கு ஷட்டரை இறக்கி வைப்பார்கள். அதேபோன்று கடையின் காவலாளி ஷட்டரைப் பாதி அளவுக்கு இறக்க 30 அடி உயரமுள்ள ஷட்டர் கிடுகிடுவென இறங்கி தானியங்கி பூட்டு தானாகப் பூட்டிக்கொண்டது. எலக்ட்ரானிக் லாக்கும் உடனடியாக லாக் ஆனது. இதனால் கடையின் உள்ளே இருந்த ஊழியர்கள் கடைக்குள்ளேயே சிக்கிக் கொண்டார்கள். கடையின் கதவைத் திறக்க காவலாளி முயன்றார். ஆனால் எலக்ட்ரானிக் பூட்டும் திறக்கவில்லை, ஷட்டரையும் கீழிருந்து மேலாக ஏற்ற முடியவில்லை.

ஷட்டர் இறங்கிய வேகத்தில் பூட்டு திருகிக் கொண்டு பழுதானதால் சாவி கொண்டும் திறக்க முடியவில்லை. கடையின் உள்ளே மேலாளர்கள் மற்றும் பெண் ஊழியர்கள் உட்பட 17 பேர் சிக்கிக்கொண்டனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முயன்றும் முடியாததால் சேலையூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். இச்சுழ்நிலையை அறிந்து போலீஸார் உடனடியாக அப்பகுதிக்கு வந்தனர். போலீஸாரும் முயற்சிக்க பூட்டு அசைந்து கொடுக்கவில்லை. இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்த போலீஸார் அவர்களை வரவழைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஷட்டரை ஆராய்ந்தனர். லாக்கைத் திறக்க முடியாது அதனால் ஷட்டரையும் ஏற்ற முடியாது உள்ளே இருக்கும் ஊழியர்களை வெளியே கொண்டுவர வேறு வழி இருக்கிறதா? என ஆராய்ந்தனர்.

ஆனால் ஷட்டர் வழியாக மட்டுமே வர முடியும் என்பதால் வேறு வழியில்லாமல் ஊழியர்களை மீட்கவேண்டும் என்பதற்காக ஷட்டரில் ஒரு ஆள் வெளியே வரும் அளவுக்கு வெட்டி எடுக்க முடிவு செய்தனர். பின்னர் கேஸ்கட்டிங் மெஷின்கள் கொண்டு வரப்பட்டு 2 அடிக்கு 2 அடி அகலத்தில் ஷட்டர் வெட்டி எடுக்கப்பட்டது. இதனால் நகைக்கடைக்குள் புகை மண்டலம் சூழ்ந்தது. இதைப் பயன்படுத்தி நகைகளை யாரும் திருட முயலலாம் என்பதால் போலீஸார் பாதுகாப்பாக இரவு முழுவதும் அங்கேயே நின்றனர். ஷட்டரை வெட்டி புகைமூட்டம் அடங்கிய பின் உள்ளே சென்ற தீயணைப்புத் துறையினர் ஒருவர் பின் ஒருவராக நகைக்கடை ஊழியர்களை வெளியேற்றினர். இதற்குள் விடிய ஆரம்பித்துவிட்டது.

பின்னர் ஷட்டரில் வெட்டிய பகுதியை மூடும் பணி நகைக்கடை சார்பில் செய்யப்பட்டது. காலையில் விடிந்தவுடன் அவ்வழியாக வந்த பொதுமக்கள் ஷட்டரில் வெட்டி எடுக்கப்பட்ட பகுதியையும், போலீஸார் பாதுகாப்புக்கு நிற்பதையும் கண்டு திருச்சி சம்பவம்போல் இங்கும் கொள்ளையர்கள் கைவரிசை காட்டிவிட்டார்களா என்று பயத்துடன் வேடிக்கை பார்க்க போலீஸார் அவர்களை கலைந்து போகச் செய்தனர்.


Tags : jeweler ,Tambaram , Tambourine, jeweler, shutter door, locked, stuck staff, shutter shutter, rescue
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...