×

நீட் ஆள்மாறாட்ட வழக்கு: மாணவர் உதித் சூர்யாவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் டாக்டராக இருந்தவர் வெங்கடேசன். இவரது மகன், உதித் சூர்யா. இவர், ஆள்மாறாட்டம் மூலம் நீட் தேர்வு எழுதி, தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தது தெரியவந்தது. இந்த தகவல் வெளியானதும்  சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அந்த பிரிவின் டிஜிபி ஜாபர்சேட் உத்தரவின்பேரில் எஸ்பி விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி உதித் சூர்யா, வெங்கடேசன்  ஆகியோரை கடந்த 25ம் தேதி கீழ் திருப்பதி அடிவாரத்தில் கைது செய்தனர்.

கைது செய்த பின் உதித் சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் இருவரையும் சிபிசிஐடி போலீசாரிடம் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். அதன்பின், தேனியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு அவர்களை சிபிசிஐடி போலீசார் கொண்டு  வந்தனர். விசாரணை முடிந்து கடந்த செப்டம்பர் 26ம் தேதி உதித் சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் ஆகிய இருவரையும் தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். கடந்த 10-ம் தேதி மீண்டும்
உதித் சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோரை தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் நீட்டித்து, வரும்  அக்டோபர் 24ம் தேதி வரை சிறையில் வைக்க உத்தரவிட்டார்.

இதற்கிடையே, மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த பிறகு மனஉளைச்சல் ஏற்பட்டது. இதனால் கல்லூரியில் இருந்து விலகி விட்டேன். அதன்பிறகு தான் என்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனக்கும் இந்த வழக்கிற்கும் எந்த சம்பந்தமும்  இல்லை. எனவே தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறி மாணவர் உதித் சூர்யா உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார். நேற்று முன்தினம், இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வு, நீட்  தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் மாணவர் உதித் சூர்யாவின் தந்தையை காவலில் எடுக்காதது ஏன். உண்மையான வில்லன், உதித் சூர்யாவின் தந்தை தான் என்று கூறினர். மேலும், மன்னிக்க முடியாத குற்றம் நடந்துள்ளதாக கூறிய  நீதிபதிகள், மாணவர் உதித்சூர்யாவுக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று உத்தரவு பிறப்பித்தனர்.

இந்நிலையில், இன்று மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை, மாணவரின் வயது மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உதித்சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. மதுரை சிபிசிஐடி டி.எஸ்.பி.முன் தினசரி காலை 10:30 மணிக்கு ஆஜராக வேண்டும் என நிபந்தனையும் வழங்கியுள்ளது.  அதே சமயம், மாணவர் உதித் சூர்யா தந்தை வெங்கடேசன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Student Udit Surya , Need impersonation case: Student Udit Surya granted conditional bail
× RELATED நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு தீவிரம்:...