×

நியூயார்க்கில் நிர்மலா சீதாராமன் பதிலடி மன்மோகன், ரகுராம் ராஜன் காலமே வங்கி துறையின் மோசமான கட்டம்

புதுடெல்லி: ‘‘முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் இருவரும் ஒன்றாக பொறுப்பில் இருந்த சமயமே, பொதுத்துறை வங்கிகளின் மோசமான காலகட்டம்,’’ என நியூயார்க்கில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தில் ‘இந்திய பொருளாதாரம்: சவால்கள் மற்றும் வளர்ச்சி’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசினார். அப்போது அவரிடம், சமீபத்தில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பேசியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. ‘நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு வருவதற்கான நிலையான பார்வை அரசிடம் இல்லை. ஒட்டுமொத்த அதிகாரமும் ஒரே இடத்தில் குவிந்திருந்ததால், மோடி அரசின் முதல் 5 ஆண்டு ஆட்சியில் பொருளாதாரத்தில் எந்த நன்மையும் ஏற்படவில்லை,’ என ரகுராம் ராஜன் பேசினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

இந்திய பொருளாதாரம் அனைத்து விதத்திலும் சீராக இருந்த நேரத்தில், ரிசர்வ் வங்கியின் தலைமை பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ரகுராம் ராஜனை ஒரு அறிஞராக நான் மதிக்கிறேன். ஆனால், அவரது பதவிக்காலத்தில் வழங்கப்பட்ட வங்கிக் கடன்கள் தான் இப்போதுவரை பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது. ரகுராம் பதவியின்போது, அவரது அரசியல் நண்பர்கள் தொலைபேசிமூலம் கேட்டால் கூட கடன்கள் வழங்கப்பட்டது. அதற்கான பாதிப்பை இன்று வரை பொதுத்துறை வங்கிகள் சந்தித்து வருகின்றன. அரசின் முதலீட்டை நம்பியே பொதுத்துறை வங்கிகள் இருக்கும் நிலையில் உள்ளன.  மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, அவர் இந்தியா பற்றி தெளிவான பார்வை கொண்டிருந்தார் என்பதை ரகுராம் ராஜன் ஒப்புக் கொள்வார் என நம்புகிறேன். (அரங்கில் பலரும் சிரித்தனர்). நான் யாரையும் கிண்டல் செய்ய விரும்பவில்லை. மன்மோகன் - ரகுராம் ராஜன் காலத்தில் இருந்ததை போன்று அதற்கு முன் பொதுத்துறை வங்கிகள் இந்த அளவிற்கு மோசமாக இருந்தது இல்லை. அவர்கள் காலம்தான் பொதுத்துறை வங்கிகளின் மோசமான காலகட்டம்.

அந்த நேரத்தில் நாம் யாரும் அதை அறிந்திருக்கவில்லை. இப்போது ரகுமான் ராஜன் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அவர் வருத்தப்படுவார். அவர் பதவிக் காலத்தில் நடந்த தவறுகளை சரி செய்து, வங்கிகளுக்கு புத்துயிர் ஊட்டுவதே இன்றைய நிதி அமைச்சர்களின் தலையாய பணியாக இருந்து வருகிறது. பல்வேறு வேறுபாடுகளை கொண்ட இந்தியாவுக்கு வலுவான தலைமையே வேண்டும். அது இல்லாமல், மிகுந்த ஜனநாயகமான தலைமை இருந்தால் இன்று வரை நாம் சரி செய்யப் பாடுபடுவதைப் போன்ற ஊழலுக்கு வழி வகுத்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.

அடிப்படை உரிமையை மறுத்த சட்டப்பிரிவு 370

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘தற்காலிகமான சட்டப்பிரிவு 370, காஷ்மீர் பெண்களின் பரம்பரை சொத்துரிமையை பறித்தது. வெளிமாநிலத்தை சேர்ந்த ஒருவரை காஷ்மீர் பெண்கள் திருமணம் செய்தால், பரம்பரை சொத்தை பெற முடியாது என்ற நிலை இருந்தது. இது மிகப்பெரிய மனித உரிமை மீறல் அல்லவா? இதைப் பற்றி எல்லாம் யாரும் பேசவில்லை. ஆனால், இன்று சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, சட்டப்பிரிவு 370 என்பது ஏதோ மனித உரிமையின் உலக குறிச்சொல்லாக பேசப்பட்டு வருகிறது. சட்டப்பிரிவு 370 காரணமாக, பல்வேறு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டன. இன்று அந்த சட்டப்பிரிவு நீக்கப்பட்டுள்ளதால், அனைவருக்கும் சமஉரிமை கிடைப்பதை எண்ணி அம்மாநில மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்’’ என்றார்.

Tags : Nirmala Sitharaman ,Retaliation ,Retaliation Manmohan ,New York ,Raghuram Rajan , Nirmala Sitharaman's retaliation, New York, Raghuram Rajan's time
× RELATED கொரோனா வைரஸ் உள்பட பல்வேறு...