×

தீவிரவாத அமைப்புகளை தங்கள் மண்ணில் செயல்பட அனுமதிப்பதால் தீவிரவாத நிதித் தடுப்பு அமைப்பால் பாகிஸ்தான் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது: அஜித் தோவல் கருத்து

டெல்லி: தீவிரவாத அமைப்புகளைத் தொடர்ந்து தங்கள் மண்ணிலிருந்து செயல்பட அனுமதிப்பதால் தீவிரவாத நிதித்தடுப்பு அமைப்பான நிதிசெயல் பணிக்குழுவின் (எப்ஏடிஎப்) கூட்டத்தில் பாகிஸ்தான் மிகப்பெரிய அழுத்தத்தில் சிக்கியுள்ளது என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார். தீவிரவாதத் தடுப்புப் படைகளின் தலைவர்கள் கூட்டம் டெல்லியில் நடந்து வருகிறது. இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜேத் தோவல் பங்கேற்றார்.

அஜித் தோவல் பேசுகையில், தீவிரவாதிகளையும், தீவிரவாத அமைப்புகளையும் தொடர்ந்து தங்கள் மண்ணில் பாகிஸ்தான் செயல்பட அனுமதித்து வருகிறது. இதனால் தீவிரவாத நிதித்தடுப்பு அமைப்பான எப்ஏடிஎப் மூலம் மிகப்பெரிய அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளது. தற்போது பாரிஸ் நகரில் எப்ஏடிஎப் கூட்டம் நடந்து வருகிறது. தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் எடுத்த நடவடிக்கை போதுமானதாக இல்லை மற்றும் நிதியுதவியைத் தடுக்கவில்லை. தங்கள் எல்லைக்குள் தீவிரவாதிகள் செயலைத் தடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருப்பதால் பாகிஸ்தானை கறுப்புப் பட்டியலில் சேர்க்க வாய்ப்புள்ளதால் அந்த நாடு கடும் அழுத்தத்தை எதிர்நோக்கியுள்ளது.

தீவிரவாதத்தை பாகிஸ்தான் அரசே கொள்கையாகப் பயன்படுத்தி வருகிறது. தீவிரவாதத்தை பாகிஸ்தான் பரப்புகிறது என்பது அனைவருக்கும் தெரியும். இதனால் சர்வதேச அளவில் விசாரணை நடத்துவதற்கு நமக்கு ஆதாரங்கள் அவசியம் தேவைப்படுகிறது. இப்போதுள்ள நிலையில் எந்த நாடும் போருக்குச் செல்லத் தயாராக இல்லை. ஏனென்றால் பொருள் இழப்பும், நிதியிழப்பும், மனித உயிர்கள் இழப்பும் எதிர்பாராத அளவில் இருக்கும். இதனால் வெற்றி என்பதையும் உறுதி செய்ய முடியாது என அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.

தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் ஒய்.சி. மோடி பேசுகையில், வங்கதேசத்தில் செயல்படும் ஜமாத் உல் முஜாகிதீன் பங்களாதேஷ் எனும் தீவிரவாத அமைப்பு 125 தீவிரவாதிகளை இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பியுள்ளது. இந்த அமைப்பு ஜார்க்கண்ட், பீகார், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் வங்கதேச அகதிகள் போர்வையில் ஊடுருவி தீவிரவாதச் செயல்களைப் பரப்புகிறார்கள். இதுதொடர்பாக என்ஐஏ சந்தேகப்படும் 125 பேரின் விவரங்களை மாநிலங்களிடம் பகிர்ந்துள்ளது எனக்  கூறியுள்ளார்.

என்ஐஏ அமைப்பி்ன் ஐஜி அலோக் மிட்டல் பேசுகையில்,  2014-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை ஜேஎம்பி தீவிரவாத அமைப்பு 20 முதல் 22 மறைவிடங்களை பெங்களூரில் அமைத்து தென்னிந்தியாவில் தீவிரவாதச் செயல்களைப் பரப்ப முயன்றது. கர்நாடக எல்லையில் உள்ள கிருஷ்ணகிரி மலைப்பகுதியில் ராக்கெட் லாஞ்சர்களை ஏவுவது குறித்து பயிற்சியும் அளித்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தொடர்பான வழக்கில் இதுவரை 127 பேரைக் கைது செய்துள்ளோம். இதில் தமிழகத்தில் இருந்து 33 பேர், உத்தரப்பிரதேசத்தில் இருந்து 19 பேர், கேரளாவில் இருந்து 17 பேர், தெலங்கானாவில் இருந்து 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.

Tags : Pakistan ,extremist organizations ,Ajit Towal , Terrorist organization, their soil, terrorist financing, Pakistan, Crisis, Ajith
× RELATED பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்...