×

வரும் 17-ம் தேதி அயோத்தி வழக்கின் இறுதி விசாரணை: டிசம்.10-ம் வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளதாக மாவட்ட நீதிபதி தகவல்

லக்னோ: அயோத்தியில் வரும் டிசம்பர் 10-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளதாக மாவட்ட நீதிபதி தெரிவித்து உள்ளார். உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி நில விவகாரத்தை உச்ச  நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி முதல் நாள் தோறும் விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணையை வரும் 17ம் தேதியுடன்  முடித்துக் கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியிருந்தது.

இதற்காக விசாரணையை தினமும் ஒரு மணி நேரம் நீட்டிக்கவும், சனிக்கிழமை அன்றும் வழக்கை விசாரிக்கவும் தயாராக உள்ளோம். அனைவரும் சேர்ந்து வழக்கை அக்டோபர் 18 க்குள் முடிக்க முயற்சி செய்வோம். மனுதாரர்கள்  விரும்பினால், மத்தியஸ்தம் மூலம், பிரச்னையை தீர்த்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. தசரா விடுமுறைக்குப்பின், உச்ச நீதிமன்றத்தில் நீண்ட விசாரணையை சந்தித்து வரும் அயோத்தி வழக்கு, இன்று இறுதி கட்டத்துக்குள்  நுழைகிறது. உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெறும் 38வது நாள் விசாரணை இன்று நடக்கிறது.

முஸ்லிம் தரப்பினர் இன்று தங்கள் விவாதங்களை நிறைவு செய்கின்றனர். அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்து அமைப்பினர் தங்களின் மறுப்புகளை சுருக்கமாக தெரிவிக்க உள்ளனர். வரும் 17ம் தேதியுடன் அயோத்தி வழக்கின் இறுதி  விசாரணை முடிகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடுத்த மாதம் 17ம் தேதி ஓய்வு பெறுகிறார். அன்றைய தினம் அயோத்தி வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அயோத்தி மாவட்ட நீதிபதி அனுஜ்குமார் ஜா கூறியதாவது: இருபத்தி ஏழு ஆண்டுகளுக்கு பிறகு அயோத்தி நில வழக்கில் தீர்ப்பை எதிர்பார்த்து வரும் டிசம்பர் மாதம் 10 ம் தேதி வரையில் 144 தடை உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் வரும் நாட்களில் பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன. இதனை முன்னிட்ட இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.


Tags : hearing ,Ayodhya , Final hearing of Ayodhya case on 17th: 144 suspended till December 10
× RELATED அயோத்தி கோயிலில் ஜனாதிபதி தரிசனம்