×

மாமல்லபுரம் மறக்க முடியாத அனுபவம்; தமிழ்நாடு தமக்கு சிறப்பான வரவேற்பு அளி்த்துள்ளது; சீன அதிபர் ஜி ஜின் பிங் பேச்சு

சென்னை: பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், சீன அதிபர் ஜின்பிங் இந்தியாவில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று மதியம் சென்னை வந்தார். பின்னர் பிரதமர் மோடியுடன் மாமல்லபுரத்தை சுற்றி பார்த்தனர். மேலும் கலை நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்தனர். பின்னர் இரவு விருந்து முடிந்ததும், நேற்று இரவு9.00 மணிக்கு மேல் சீன அதிபர் மாமல்லபுரத்தில் இருந்து காரில் கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலுக்கு வந்து இரவு தங்கினார். பிரதமர் மோடி, காரில் கோவளம் புறப்பட்டு சென்று அங்குள்ள தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலுக்கு சென்று இரவு தங்கினார்.

இதனையடுத்து இன்று இன்று காலை மோடி தங்கியிருந்த தாஜ் பிஷர்மேன் கோவ் ஓட்டலுக்கு கார் மூலம் சீன அதிபர் சென்றார்.  அ்ங்கு சென்ற ஜி ஜின் பிங்கை பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார். பின்னர் ஓட்டலில் கண்ணாடி அறையில் தனியாக ஆலோசனை நடத்தினர். பின்னர் அதிகாரிகள் மத்தியிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின் பிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயங்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் பேச்சு

இந்தியா - சீனா இடையிலான உறவில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதாக முறைசாரா உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின் பிங் பேசினார். இருநாடுகளுக்கு இடையே ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு ஏற்பட மாமல்லபுரம் பேச்சுவார்த்தை உதவும் என்றும், மோடியுடன் நடந்த பேச்சுவார்த்தை பயனுள்ளதாக அமைந்தது என்று தெரிவித்தார். மேலும் சென்னையில் தனக்கு அளித்த வரவேற்புக்கு சீன அதிபர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மாமல்லபுரத்துக்கு வந்தது மறக்க முடியாத அனுபவத்தை தந்துள்ளதாக குறிப்பிட்ட ஜின் பிங், சீனா - இந்தியா இடையிலான முறைசாரா சந்திப்பு தொடர வேண்டும் என்று ஜின் பிங் விருப்பம் தெரிவித்தார். பிரதமர் மோடியும் தானும் மனம் விட்டு பேசியதாக சீன அதிபர் ஜின்பிங் கருத்து தெரிவித்தார். இயல்பான நண்பர்களை போல் நேற்று இருவரும் கருத்துக்களை பரிமாறி கொண்டதாக தெரிவித்தார். தமிழ்நாடு தமக்கு சிறப்பான வரவேற்பை அளித்துள்ளதாக தெரிவித்த அவர், மாமல்லபுரம் சந்திப்பு மறக்கமுடியாத நிகழ்வாக அமைந்து விட்டது என்றும் சீன அதிபர் தெரிவித்தார்.  

பிரதமர் மோடி பேச்சு

மதிப்பிற்குரிய விருந்தினரை வரவேற்கிறேன் என பிரதமர் மோடி தமிழில் தனது பேச்சை தொடங்கினார். சீனா உடனான சிக்கல்களை சுமூகமாக தீர்த்துக்கொள்ளவே இந்தியா விரும்புவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். இருநாடுகளுக்கும் இடையேயான பிரச்சினைகளை மேலும் அதிகரிக்க இந்தியா விரும்பவில்லை என்று தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியா - சீனா உறவில் சென்னை ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளதாக மோடி தெரிவித்தார்.

இந்தியாவும், சீனாவும் பொருளாதார வல்லரசு நாடுகள் என்றும், 2,000 ஆண்டுகளாவே இந்தியாவும், சீனாவும் பொருளாதார வல்லரசாகவே திகழ்வதாக மோடி பெருமிதம் தெரிவித்தார். சீனாவுக்கும் தமிழ்நாட்டுக்கு இடையே கலாச்சார, வர்த்தக உறவு பழங்காலத்தில் இருந்தே நீடித்து வருகிறது என்று தெரிவித்தார். உஹான் சந்திப்புக்கு பிறகு இரு நாடுகள் இடையிலான உறவு மேலும் உறுதி அடைந்துள்ளதாகவும், சீன அதிபரை தமிழ்நாட்டிற்கு மனதார வரவேற்கிறேன் என்று மோடி தெரிவித்தார்.

Tags : Mamallapuram ,President ,talks ,Tamil Nadu ,Modi ,Chinese ,Summit ,Xi Jinping , Mamallapuram, Prime Minister Modi, Chinese President, Xi Jinping, Informal Summit, Trade, Security
× RELATED செங்கல்பட்டு – மாமல்லபுரம் இடையே...