×

சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து 7 அடுக்கு பாதுகாப்பை மீறி 11 திபெத்தியர்கள் போராட்டம்

* பெங்களூருவில் இருந்து விமானத்தில் வந்தவர்களும் கைது
* கிண்டி நட்சத்திர ஓட்டல் முன்பு பரபரப்பு

சென்னை: சீன அதிபர் நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு சென்னை வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திபெத்திய விடுதலை போராளிகள் மற்றும் திபெத்திய மாணவர்கள் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். சீன அதிபர் வரும் நேரத்தில் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்த அவர்கள் பல வகையில் முயற்சி செய்து வருகின்றனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபடும் திபெத்திய மாணவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். குறிப்பாக, கடந்த வெள்ளிக்கிழமை கிழக்கு தாம்பரம் அருகே தங்கியிருந்த 8 திபெத்திய மாணவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு அறை எடுத்து தங்க உதவிய தனியார் கல்லூரி பேராசிரியரும் கைது செய்யப்பட்டார். மேலும், சாலை மார்க்கமாக மாமல்லபுரம் செல்லும் சீன அதிபருக்கு கருப்பு கொடி காட்ட கோவளம் அருகே உள்ள குன்றுக்காடு கிராமத்தில் தங்கியிருந்த 5 திபெத்தியர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் சீன அதிபர் செல்லும் பாதையான சென்னை விமான நிலையம், சீன அதிபர் தங்கும் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் மற்றும் மாமல்லபுரம் வரை 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடுமையான பாதுகாப்புகளையும் மீறி சீன அதிபர் தங்கும் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் அருகே நேற்று பகல் 11.30 மணிக்கு திடீரென 2 பெண்கள் உட்பட 5 திபெத்திய மாணவர்கள் தங்களின் கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை சற்றும் எதிர்பார்க்காத போலீசார் திபெத்திய மாணவர்களை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சீன அதிபருக்கு எதிராக கோஷம் எழுப்பிய அவர்களை குண்டுக்கட்டாக கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். 7 அடுக்கு பாதுகாப்பை மீறி திபெத்திய மாணவர்கள் 5 பேர் போராட்டம் நடத்திய சம்பவம் கிண்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோல், சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் 6 திபெத்தியர்கள் நேற்று காலை வந்தனர். திடீரென விமான நிலையத்தில் சீன அதிபருக்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினர். இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை பிடித்து மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து 6 பேரையும் போலீசார் கைது செய்து ரகசிய இடத்திற்கு அழைத்து சென்றனர்.

சீன அதிபர் வருகையின் போது அடுத்தடுத்து 5 பெண்கள் உட்பட 11 திபெத்தியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்ைனயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திபெத்தியர்கள் அடுத்தடுத்து நடத்தும் போராட்டத்தால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் திணறினர். திபெத்தியர்கள் தொடர் போராட்டத்தால் சென்னை விமான நிலையம் மற்றும் கிண்டி நட்சத்திர ஓட்டல் முதல் மாமல்லபுரம் வரை போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சீன அதிபர் வருகையின் போது பெங்களூருவில் இருந்து சென்னை உள்நாட்டு முனையத்திற்கு வந்த விமானத்தில், பயணிகள் போல் 2 பெண் உட்பட 3 திபெத்தியர்கள் வந்தனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து பைகளை சோதனையிட்டனர். அப்போது பையில் கருப்பு கொடிகள் இருந்தது. மேலும், சீன அதிபருக்கு கருப்புகொடி காட்ட டெல்லியில் இருந்து பெங்களூரு வந்து அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்தது விசாரணையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து மூன்று பேரையும் போலீசார் விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிறகு அவர்களை போலீசார் கைது செய்து ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். நேற்று மாலை வரை சென்னை விமான நிலையத்தில் 4 பெண்கள் உட்பட 9 பேர் மற்றும் கிண்டி நட்சத்தில் ஓட்டல் அருகே 5 பேர் என மொத்தம் 14 திபெத்தியர்களை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Tibetans , 11 Tibetans protest , 7-layer security
× RELATED ஊட்டியில் திபெத்தியர்கள் அமைதி பேரணி