×

தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்திலுள்ள ஓலைச்சுவடிகளை டிஜிட்டலாக்கும் பணியில் தாமதம் ஏற்படுவது ஏன்?: மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தர உத்தரவு

மதுரை:  தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்திலுள்ள தமிழ் ஓலைச்சுவடிகளை டிஜிட்டலாக்கும் பணியில் ஏற்பட்ட தாமதம் குறித்து, மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், மோர்பண்ணையை சேர்ந்த வக்கீல் தீரன் திருமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தஞ்சாவூரில் உள்ள சரஸ்வதி மஹாலில்வரலாற்று பொக்கிஷங்களான   7 ஆயிரம் தலைப்பிற்கும் அதிகமான பனை ஓலைச்சுவடிகள் உள்ளன. இதில், தமிழ் இலக்கியம் மற்றும் மருத்துவம் சார்ந்த   ஏராளமானவை. முற்கால சோழர்களின்  வரலாற்று ஆவணங்களான மணிபல்லவ நடையில் எழுதப்பட்ட சான்றுகளும் உள்ளன. 537 ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட கம்பராமாயணமும் உள்ளது. இவை அனைத்தும் முறையாக பராமரிக்கப்படாமலும், பாதுகாப்பின்றியும் உள்ளன. இவற்றை டிஜிட்டல் மயமாக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதை விரைந்து முடிக்கவும், இலவசமாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்கவும்,  இணையதளங்களில் காட்சிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. வக்கீல் அழகுமணி ஆஜராகி, ‘‘இந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளில் உள்ளவற்றை டிஜிட்டலாக்கும் பணிகள் முடிந்து விட்டன. தமிழ் ஓலைச்சுவடிகளின் பணிகள் மட்டுமே தாமதமாக நடக்கிறது’’ என்றார்.அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘தஞ்சையில் உலக தமிழ் மாநாடு நடந்தபோதே ஓலைச்சுவடிகள் உள்ளிட்டவை கணினிமயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டதே. இன்னுமா பணிகள் நடக்கிறது’’ என்றனர்.
அரசு வக்கீல் பத்மாவதிதேவி, ‘‘2,054 தமிழ் ஆவணங்களில் 3லட்சத்து 66 ஆயிரத்து 354 பக்கங்கள் டிஜிட்டலாகியுள்ளது. இன்னும், 2,187 ஆவணங்களில் 4.20 லட்சங்கள் பக்கங்களுக்கான பணிகள் மீதமுள்ளன. 834 தெலுங்கு ஆவணங்களில் 1.54  லட்சம் பக்கங்களுக்கான பணிகள் முடிந்துள்ளன. 3,149 மராத்தி ஆவணங்களில் 5 லட்சத்து 1875 பக்கங்கள் டிஜிட்டலாகியுள்ளது. 57 இந்தி ஆவணங்களில் 3,267 பக்கங்கள் டிஜிட்டலாகியுள்ளது. சமஸ்கிருதத்திலும்  பணிகள் மீதமுள்ளன’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘டிஜிட்டலாக்கும் பணியில் எத்தனை பேர் ஈடுபட்டுள்ளனர்? எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? இன்னும் எவ்வளவு நிதி தேவைப்படுகிறது? எப்போது பணிகள் முடியும் என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள்  தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நவ.11க்கு தள்ளி வைத்தனர்.


Tags : State Governments ,Central ,Tanjay Saraswati Mahal Library Digitizing , Tanjay Saraswati, Mahal Library,: Central ,State
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...