×

கேரளா தொடர் கொலை வழக்கு: கைது செய்யப்பட்டுள்ள ஜோலி உள்பட 3 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோழிக்கோடு: கேரளாவில் தொடர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜோலி ஜோசப் உள்பட 3 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கேரளாவின் கோழிக்கோடு அருகே கூடத்தாயி பகுதியைச் சேர்ந்தவர் ராய் தாமஸ். இவரது மனைவி ஜோலி. கடந்த 2002-2016ம் காலக்கட்டத்தில் ஜோலியின் கணவர் ராய்தாமஸ், மாமனார் டோம் தாமஸ், மாமியார் அன்னம்மா உள்பட 6 பேர் மர்மமாக இறந்தனர். பின்னர் சொத்துக்கள் ஜோலியின் பெயருக்கு மாற்றப்பட்டிருந்தது. இதற்கிடையே, ராய்தாமசின் அண்ணன் ரோஜோ, தந்தையின் உயில் மற்றும் குடும்பத்தினர் 6 பேரின் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து 6 பேர் உடல்களையும் போலீசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். விசாரணையில் 6 பேரையும் ஜோலி, சயனைடு கொடுத்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், ஜோலியை கைது செய்தனர். அவருக்கு சயனைடு வாங்கி கொடுத்த உறவினர் மேத்யூ, நகை தொழிலாளி பிரஜூகுமாரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூவரும், தாமரசேரி நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, குற்றப்பரிவு போலீசார் தரப்பில் ஜோலி மற்றும் கைது செய்யப்பட்டுள்ள இருவரை 15 நாளில் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. இந்நிலையில், ஜோலி ஜோசப், மேத்யூ, பிரஜூகுமார் ஆகியோரை 6 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூவரையும் அக்டோபர் 16ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினமே குற்றம்சாட்டப்பட்டவர்களின் ஜாமீன் மனுவும் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஜோலி ஜோசப், பிரஜூகுமார் இருவரும் மருத்துவ பரிசோதனைக்காக தாமரசேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மருத்துவ பரிசோதனைகள் முடிந்த பின்னர், மூவரும் வடகர காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவர்களிடம் விசாரணை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Kerala ,Court ,persons ,Jolie Kerala , Kerala, serial killer, Jolly , policeman, Thamarassery court
× RELATED சரக்கு போக்குவரத்து, ஆம்புலன்ஸ்...