×

தா.பேட்டை அருகே பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் விநோத திருவிழா

தா.பேட்டை : தா.பேட்டை அருகே பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் விநோத திருவிழா நேற்று நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு பூசாரியிடம் சாட்டை அடி வாங்கினர்.திருச்சி மாவட்டம், தா.பேட்டை அடுத்த வெள்ளாளப்பட்டி கிராமத்தில் அச்சப்பன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஆயுத பூஜைக்கு அடுத்த நாளான விஜயதசமியன்று பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் விநோத திருவிழா நடைபெறுவது வழக்கம். நேற்று விழாவை முன்னிட்டு அச்சப்பன், அகோரவீரபத்திரர், மதுரைவீரன், வெடிகாரகுள்ளன், பாப்பாத்தி, மகாலட்சுமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து கோயிலில் இருந்து அச்சப்பன், அகோர வீரபத்திரன் மற்றும் பரிவார தெய்வங்களை பல்லக்கில் வைத்து காட்டு கோயிலுக்கு சுமந்து சென்றனர். அங்கு கோயில் பூசாரிகள் தப்பு அடித்து ஆடினர். அப்போது பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டது. அங்கு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டுகளுக்கு பின்னர் நீண்ட வரிசையில் தலைமுடியை அவிழ்த்துவிட்டு மண்டியிட்டு கைகளை உயரே தூக்கி பிடித்தபடி அமர்ந்திருந்த பெண்களின் கைகளில் பூசாரி சாட்டையால் அடித்தார். ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பெண்கள் சாட்டையடி வாங்கினர். ஒரு சில பெண்கள் ஒரு அடியில் எழுந்தனர். சிலர் நான்கு, ஐந்து அடிகள் வரை பெற்றனர். அப்போது கோமாளி என்பவரும் மாட்டுத்தோலால் செய்யப்பட்ட பட்டையால் அடித்தார்.

இது குறித்து திண்டுக்கல்லை சேர்ந்த ராதிகா கூறியதாவது, சாட்டையால் அடி வாங்கினால் பேய் பிடித்திருந்தால் விலகுவதோடு திருமண தடை நீங்குதல், குழந்தை பாக்கியம் கிடைத்தல், கடன் பிரச்னை அகலுதல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பது எங்கள் நம்பிக்கை. கடந்தாண்டு திருமணம் நடைபெறவேண்டி சாட்டையால் இங்கு வந்து அடி வாங்கினேன். எனக்கு திருமணம் ஆகிவிட்டது. நேர்த்திக்கடனை செலுத்த இப்போது மீண்டும் சாட்டையால் அடி வாங்கினேன் என்றார்.

விழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பெண்கள் சாட்டையால் அடி வாங்கினர். பின்னர் கோயிலுக்கு சென்று முகத்தில் தீர்த்தம் தெளித்துக்கொண்டு விபூதி பிரசாதம் பெற்றனர். இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதேபோல் தா.பேட்டை அருகே ஊரக்கரையில் ஒட்டையப்பன் கோயிலில் பேய் விரட்டும் திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகளை தொடர்ந்து காட்டுக்கோயிலில் நீண்ட வரிசையில் அமர்ந்திருந்த பெண்களின் கைகளில் பூசாரி சாட்டையால் அடித்தார். நேர்த்திக்கடனுக்காகவும், வேண்டுதலுக்காகவும் ஏராளமான பெண்கள் சாட்டையால் அடி வாங்கினர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Demonstration ,women ,Da Pate ,festival ,Trichy , strange festival,Trichy ,chasing ,women ,whip
× RELATED கடலூரில் சிறுவன் இயக்கிய ஆம்புலன்ஸ் மோதி விபத்து: 2 பெண்கள் காயம்