×

சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் திருப்பதியில் பிரம்மோற்சவம் நிறைவு : மாலையில் வேத மந்திரங்கள் முழங்க கொடி இறக்கம்

ஹைதரபாத் : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் 9 நாட்கள் நடைபெற்ற பிரமோற்சவ விழா நிறைவுபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 30ம் தேதி பிரமோற்சவ விழா  கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையும் மாலையும் மலையப்பசவாமி 4 மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த 4ம் தேதி கருடசேவை நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று காலை தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு கல்கி அவதாரத்தில் குதிரை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்தார். இந்நிலையில் விழாவின் நிறைவு நாளான இன்று காலை கோவிலில் இருந்து உற்சவ மூர்த்திகளும் சக்கரத்தாழ்வாரும் ஊர்வலமாக வராஹ சாமி கோவிலுக்கு எடுத்து வரப்பட்டனர்.

அங்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி, சக்கரத்தாழ்வாருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இதையடுத்து ஏழுமலையான் கோவில் புஷ்கரணியில் ((தெப்பக் குளம்)) சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. சக்கரத்தாழ்வாரை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தெப்பக் குளத்தில் புனித நீராடினர். இதன் பின்னர் இரவு 7 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க தங்க கொடி மரத்தில் ஏற்றப்பட்டிருந்த கருட கொடி இறக்கப்படுவதுடன் நடப்பு ஆண்டுக்கான பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது. 9 நாட்கள் நடைபெற்ற பிரமோற்சவத்தின் போது 5000திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். பிரமோற்சவத்தையொட்டி பல்வேறு மாநிலங்களில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.


Tags : Thirupathi Brahmotsavam ,Chakrattavar Tirthavari ,Chakrattavar Theerthavari , Tirupati, Ezhumaliyan, Kovil, Brahmotsavam, Chakrathatavar, Theerthavari
× RELATED திருப்பதி பிரம்மோற்சவம் : தங்க கருட...