×

மெட்ரோ ரயில் கார்ஷெட் அமைக்க ஆரே காலனியில் மரங்களை வெட்ட தடை: கைது செய்யப்பட்ட ஆர்வலர்களையும் விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு

மும்பை: மும்பை, ஆரே காலனி பகுதியில் மெட்ரோ கார்ஷெட் கட்டுவதற்காக மேற்கொண்டு மரங்களை வெட்ட உச்ச நீதிமன்றம் நேற்று தடை விதித்து உத்தரவிட்டது. மும்பையில் கொலாபா-பாந்த்ரா-சீப்ஸ் இடையே செயல்படுத்தப்படும் 3வது மெட்ரோ ரயில் வழித்தடத்துக்கான பணிமனையை (கார்ஷெட்) பசுமை நிறைந்த ஆரே காலனி பகுதியில் அமைக்க அரசு முடிவு செய்தது. இதற்காக அந்த பகுதியில் உள்ள 2,700 மரங்களை வெட்ட மும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்துக்கு மும்பை மாநகராட்சி அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தாக்கல் செய்த 4 மனுக்களை மும்பை உயர் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்து விட்டது. இதையடுத்து அன்றைய தினம் இரவில் இருந்தே மரங்களை வெட்டும் பணியை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள் தொடங்கினர்.இதனால் ஆவேசமடைந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் ஆரே காலனியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் ஆர்வலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 29 ஆர்வலர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள்.

மேற்கொண்டு போராட்டம் நடைபெறாமல் தடுக்க ஆரே காலனி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த பகுதியில் 5 கி.மீ. சுற்றளவுக்குள் யாரும் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில் ஆரே காலனியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடர்ந்து மரங்கள் வெட்டப்பட்டு வந்தன. இதற்கிடையே, ஆரே காலனியில் மரங்களை வெட்ட தடை விதிக்கக்கோரி ரிஷாவ் ரஞ்சன் என்ற சட்டக்கல்லூரி மாணவர் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், மும்பையில் உள்ள அதிகாரிகள் தொடர்ந்து மரங்களை வெட்டி வருகிறார்கள். மும்பையின் நுறையீரல்களாக விளங்கும் மரங்களை கொலை செய்கிறார்கள். அதிகாரிகள் ஏற்கனவே 1,500 மரங்களை வெட்டி விட்டதாக செய்திகள் வௌியாகி இருக்கிறது. இது மட்டுமின்றி மும்பை மாநகராட்சி மற்றும் மும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்திய எங்கள் நண்பர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். உச்ச நீதிமன்றம் இதில் உடனே தலையிட்டு மேற்கொண்டு மரங்கள் வெட்டப்படாமல் தடுக்க வேண்டும். கைது செய்யப்பட்டவர்களையும் விடுவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

உச்ச நீதிமன்றம் இந்த கடிதத்தை ஒரு பொது நலன் மனுவாக ஏற்று தானாக விசாரிக்க முன்வந்தது. அதன்படி நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய ஒரு சிறப்பு அமர்வு முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆரே காலனியில் மரங்களை வெட்ட நீதிபதிகள் தடை விதித்தனர். மரங்கள் எதையும் வெட்டக்கூடாது என்று அவர்கள் உத்தரவிட்டனர். ஒட்டுமொத்த பிரச்னையையும் தாங்கள் ஆய்வு செய்ய வேண்டியதிருப்பதாக கூறி, உச்ச நீதிமன்றத்தின் வனப்பரிவு பெஞ்சுக்கு அதை மாற்றி விசாரணையை அக்டோபர் 21ம் தேதிக்கு தள்ளி வைத்தனர். மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து கைது செய்யப்பட்டவர்கள் இன்னும் சிறையில் இருந்தால் அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னதாக நடந்த விசாரணையின்போது, கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டு விட்டதாக மகாராஷ்டிரா அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மகாராஷ்டிரா அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த விவகாரம் சம்பந்தப்பட்ட அனைத்து ரிக்கார்டுகளும் தன்னிடம் இல்லை என்று கூறினார். எனினும் வழக்கின் முடிவு தெரியும் வரையில் ஆரே காலனியில் மரங்கள் வெட்டப்படாது என்று அவர் உறுதி அளித்தார். இதற்கிடையே ஆரே காலனியில் 144 தடை உத்தரவு இன்று காலை வரை அமலில் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags : Supreme Court ,release ,activists , Supreme Court ,orders, release , arrested activists
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...