×

மன்னார் வளைகுடாவில் 15 ஆண்டுகளுக்கு பின்னர் கடலடி ஆய்வு: 62 வகையான புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு

ராமேஸ்வரம்: இந்தியாவின் தென்கோடியில் ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி மட்டுமின்றி இலங்கை வரையிலும் மன்னார் வளைகுடா பரந்து விரிந்துள்ளது. சுமார் 10 ஆயிரத்து 500 சதுர கிலோ.மீட்டர் பரப்பளவு உள்ள இந்த பகுதியில் 21 தீவு கூட்டங்கள் உள்ளன. கடல்வாழ் பல்லுயிர் உயிர் கோலமாக அறிவிக்கப்பட்ட இப்பகுதியில் ஏராளமான பவளப்பாறைகள் உள்ளன. இந்த பவளப்பாறைகள், மீன்கள் உள்ளிட்ட ஏராளமான கடல்வாழ் உயிரினங்களுக்கு முக்கியமான வாழ்விடமாக அமைந்துள்ளன. இங்கு 4 ஆயிரத்து 223 வகையான கடல்வாழ் தாவரம் மற்றும் உயிரினங்கள், அழிந்துவரும் இனமான கடல்பசு, 117 வகை பவளப்பாறைகள், 14 வகை கடல் புற்களும் இருப்பதாக கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் மன்னார் வளைகுடாவில் தற்போதைய கடல்வாழ் உயிரியல் வளம் குறித்து விரிவான ஆய்வு நடத்திட மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகம் திட்டமிட்டது.

இதையடுத்து கடந்த 2017 மே மாதம் முதல் 2019 மார்ச் மாதம் வரை மன்னார் வளைகுடாவில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த ஆய்வில் பல புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வில் 11 கடல்பஞ்சு இனங்கள் 14 கடின பவளப்பாறை இனங்கள், 2 கடல்பாசி இனங்கள், 2 மீன் இனங்கள், 17 மெல்லிய பவளப்பாறை இனங்கள், 16 சங்கு இனங்கள் என 62 புதிதான உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இவை தவிர 50-க்கும் மேற்பட்ட அடையாளம் காணமுடியாத புதிய உயிரினங்களும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மன்னார் வளைகுடா என்பது பல்லாயிரக்கணக்கான மீன்களுக்கு மட்டுமின்றி மனிதர்களுக்கும் உரித்தான இடம். இயற்கை சமநிலைக்கும், பல்லுயிர் பெருக்கத்திற்கும் காரணமான மனங்கவரும் மன்னார் வளைகுடாவை காப்பதில் அனைவரும் உறுதி ஏற்கவேண்டும்.


Tags : Gulf of Mannar , Gulf of Mannar, 15 years, undersea exploration, 62 species, new species, discovery
× RELATED சுறா மீன் துடுப்புகள், கடல் அட்டைகள் தீவைத்து எரிப்பு