×

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு: மாணவன் இர்பான் கோர்ட்டில் சரண் : சிறையில் அடைக்கப்பட்டார்

சேலம்: நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில், சிபிசிஐடி போலீசாரால் தேடப்பட்ட  மாணவன் இர்பான் நேற்று  சேலம் கோர்ட்டில் சரணடைந்தார். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில் முதலாமாண்டு சேர்ந்த சென்னையை சேர்ந்த மாணவர்கள் உதித்சூர்யா, பிரவீண், ராகுல் ஆகிய 3 பேரும், அவர்களது தந்தைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் வாணியம்பாடியை சேர்ந்த மாணவன் இர்பானின் தந்தை டாக்டர் முகமது சபியை கடந்த 3 நாட்களுக்கு முன்பு  சிபிசிஐடி போலீசார் பிடித்தனர். அவர் தேனி சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.  இர்பான் மொரீசியஸ் தப்பி சென்று விட்டதாகவும், அவர் சிபிசிஐடி அலுவலகத்திற்கு வருவார் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், இர்பான் நேற்று மதியம் 12 மணியளவில், திடீரென சேலம் 2வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். நீதிபதி சிவா, அவரை வருகிற 9ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதன்படி அவர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.  அவரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். வரும் 9ம்தேதி இர்பான், இந்த வழக்கு விசாரிக்கப்படும் தேனி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார். அதன்பிறகு போலீசார் மனு தாக்கல் செய்து விசாரணைக்கு எடுத்துக் கொள்வார்கள். அதற்கு முன்பாகவே மனு செய்யும் பட்சத்தில் நீதிமன்ற அனுமதியுடன் அவரை உடனடியாக தேனிக்கு அழைத்துச் செல்வார்கள். கோட்டை விட்ட சிபிசிஐடி: மாணவன் இர்பான் மொரீசியசில் இருப்பதாகவும், அங்கிருந்து வரும்போது அவரை  கைது செய்யவும் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அவர் மொரீசியசிலிருந்து பெங்களூர் வந்து சேலம் வந்தது தெரியாமல் சிபிசிஐடி போலீசார் கோட்டை விட்டு விட்டனர். அவர் சரண் அடைந்த பிறகே சேலம் சிபிசிஐடி போலீசார் கோர்ட்டுக்கு வந்தனர்.

திருப்பத்தூரில் புரோக்கர் கைது

இர்பானின் தந்தை முகமது  சபியிடம் நேற்று முன்தினம் நடத்திய விசாரணையில், வேதாச்சலம், முகமது ரஷீத்  என்ற இரு புரோக்கர்களின் பெயர்களை தெரிவித்திருந்தார். அவர்களை போலீசார்  வலைவீசி தேடி வருகின்றனர். முகமது சபியிடம் நேற்று 2வது நாளாக  நடத்திய விசாரணையில், திருப்பத்தூரை சேர்ந்த கோவிந்தராஜ் என்ற புரோக்கரும்  ஆள்மாறாட்ட மோசடியில் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து  திருப்பத்தூர் சென்ற சிபிசிஐடி போலீசார் கோவிந்தராஜை கைது செய்தனர். அவரை  விசாரணை செய்வதற்காக இரவோடு இரவாக தேனிக்கு அழைத்து வந்தனர். இவரிடம்  விசாரணை நடத்தினால் மேலும் பல தகவல்கள் வெளிவரும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே ஐகோர்ட் மதுரை கிளையில் உதித்சூர்யாவின் முன்ஜாமீன் மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் போலீசில் சரணடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட உதித்சூர்யாவின் வாக்குமூலத்தை வாங்கி படித்துப் பார்த்த நீதிபதி, ‘‘மனுதாரர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதால் அவரது முன்ஜாமீன் மனு, ஜாமீன் மனுவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த மனு மீதான விசாரணை அக். 14க்கு தள்ளி வைக்கப்படுகிறது’’ என்றார்.

தர்மபுரி மருத்துவ கல்லூரி முதல்வரிடம் நான்கு மணி நேரம் சிபிசிஐடி விசாரணை

தர்மபுரி மருத்துவக்கல்லூரி முதல்வர் ஸ்ரீனிவாசராஜ் தேனியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் எஸ்பி விஜயகுமார் முன் நேற்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 4 மணிநேரம் விசாரணை நடந்தது. அப்போது இந்த முறைகேட்டினை செப். 4ம் தேதியே கண்டறிந்து விட்டதாகவும், அது தெரிந்தவுடன்,  இர்பான் தலைமறைவாகி விட்டதாகவும் தெரிவித்தார். தொடர் நடவடிக்கைகள் குறித்த ஆவணங்களையும், இர்பான் ஆள்மாறாட்டம் செய்து கல்லூரியில் சேர்ந்தார் என்பதற்கான ஆதாரங்களையும் எஸ்பியிடம் ஒப்படைத்தார்.

பின்னர் எஸ்பி விஜயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது: தர்மபுரி மருத்துவக்கல்லூரி முதல்வர் னிவாசராஜ் கொடுத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் இர்பானின் தந்தை டாக்டர் முகமது சபி ஆள் மாறாட்டம் செய்து, தனது மகனை கல்லூரியில் சேர்த்தது தெரிய வந்துள்ளது. முகமது சபியிடம் வாக்குமூலம் வாங்கிய பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். இர்பானை விசாரணைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்போம். இதுபோல் பல மாணவர்கள் சேர்ந்துள்ளார்களா என்பது குறித்து தற்போது எதுவும் கூற முடியாது. தலைமறைவாக உள்ள புரோக்கர்களை பிடிக்கும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன என்றார். திருவனந்தபுரத்தில் புரோக்கர் ஜார்ஜ் ஜோசப் கைது செய்யப்பட்டு ஆறு நாட்கள் ஆகியும், அவர் எங்கிருக்கிறார் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை.


Tags : Irfan ,student ,recipient ,court , NEET CHOICE CHANGE ,Student , imprisoned in Irfan court
× RELATED எம்எஸ் தோனியை டி20 உலகக் கோப்பை அணியில்...