×

ஆள்மாறாட்டம் தடுக்க இனி கடும் நடவடிக்கை: நாராயணபாபு, மருத்துவக்கல்வி இயக்குனர் (பொறுப்பு)

தமிழக மருத்துவ கலந்தாய்வு மூலம் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக குறறம்சாட்டப்பட்ட உதித்சூர்யா, அவரின் குடும்பத்தினர் மீது மருத்துவக்கல்வி இயக்ககத்தின் உத்தரவின்பேரில் தான் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆள்மாறாட்ட  புகார் விவகாரம் தொடர்பாக, அனைத்து கல்லூரிகளிலும் குழு அமைத்து, மருத்துவ மாணவர்களின் புகைப்படங்கள், ஆவணங்களை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. சில கல்லூரிகள் ஆவணங்கள், புகைபடங்களில்  மாறுபாடு இல்லை என்று அறிக்கை தாக்கல் செய்துள்ளன.தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்கும் 3 மாணவர்கள் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு இருப்பதாகவும் அவர்களிடம் விசாரணை நடந்துகொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அவர்களுக்கு நீட் மதிப்பெண் அடிப்படையில்  இணையதளம் மூலம் சீட் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நீட் ஆள்மாறாட்ட விவகாரத்திற்கும் தமிழக மருத்துவக்கல்வி இயக்ககத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. குறிப்பிட்ட நிகர்நிலை பல்கலைக்கழங்களின் முறைகேடு நடைபெற்றிருந்ததால், அதுதொடர்பாக அந்தந்த நிகர்நிலை  பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களிடம் கேள்வி எழுப்ப வேண்டும். மருத்துவக்கல்வி இயக்ககம் என்பது அரசு மருத்துவக்கல்லூரி, தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்களுக்கானது. நீட் தேர்வில் முறைகேடு நடந்ததால்  அதுதொடர்பாக தேசிய தேர்வுகள் முகமையிடம் கேள்வி எழுப்ப வேண்டும்.

மத்திய அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான கவுன்சலிங் கமிட்டி சீட் ஒதுக்கீடு செய்ததில் பிரச்னை என்றால் மத்திய கவுன்சலிங் கமிட்டியிடம் கேள்வி எழுப்ப வேண்டும். தமிழக மருத்துவக்கல்வி இயக்ககத்தின்கீழ் செயல்படும் கல்லூரிகளில்  புகைப்படங்களில் மாறுபாடு உள்ள மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு அவர்கள் ஆள்மாறாட்டத்தில் ஈடுபடவில்லை என்பதும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகமும் மாணவர்களின் ஆவணங்களை சரிபார்க்க உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்படும் பட்சத்தில் பல்கலைக்கழக துணை வேந்தர் ஒழுங்கு நடவடிக்கை  மேற்கொள்வார். 2017ம் ஆண்டு முதல் தமிழகத்தில் நீட் மதிப்பெண் அடிப்படையில் சேர்ந்த மாணவர்களின் ஆவணங்கள் அனைத்தும் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2017 முதல் தற்போது வரை உள்ள மாணவர்களின் ஆவணங்கள்,  புகைப்படங்களை பல்கலைக்கழகம் சரிபார்த்தால் மருத்துவக்கல்வி இயக்ககம் தரப்பில் அதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும்.

இப்போது ஆள்மாறாட்ட புகார் எழுந்துள்ளதால், அடுத்த கட்ட நடவடிக்கையில் நாங்கள் இறங்கி உள்ளோம். மாணவர்களை சோதிப்பதில் கைரேகை பதிவும் முக்கியம் என்று விதிமுறை வருகிறது. வரும் கல்வியாண்டு முதல், தமிழக மருத்துவ  மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் போதே, மாணவர்களின் கைரேகை பதிவு செய்யப்படும். புகைப்படங்களில் சிறு மாறுதல்கள் இருந்தாலும் கைரேகை பதிவு மூலம் குறிப்பிட்ட நபர் தான் என்பதை உறுதிப்படுத்தப்படும்.  இதுதவிர விண்ணப்பித்தல், சான்றிதழ் சரிபார்ப்பு, சீட் தேர்வு என அனைத்து நிலைகளிலும் கைரேகை பதிவு ஒப்பிட்டு பார்க்கப்படும். இதனால் இனி வரும் ஆண்டுகளில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபடுவது 100 சதவீதம் தவிர்க்கப்படும்.  2017 முதல்  தற்போது வரை உள்ள  மாணவர்களின்
ஆவணங்கள், புகைப்படங்களை பல்கலைக்கழகம் சரிபார்த்தால்  மருத்துவக்கல்வி இயக்ககம் தரப்பில் அதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும்.

Tags : Narayanababu ,Director of Medical Education , prevent , Narayanababu, Director, Medical Education
× RELATED தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குனராக டாக்டர் ஜெ.சங்குமணி நியமனம்