×

சர்வதேச ஹாக்கி இந்தியா ஹாட்ரிக் வெற்றி: ஸ்பெயினை மீண்டும் பந்தாடியது

ஆன்ட்வெர்ப்: ஸ்பெயின் அணிக்கு எதிராக நடந்த 3வது ஹாக்கி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று தொடர்ச்சியாக 3வது வெற்றியை பதிவு செய்து அசத்தியது.பெல்ஜியம் மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு எதிராக இந்திய ஆண்கள் ஹாக்கி அணி மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் பெல்ஜியம் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்தியா, அடுத்து ஸ்பெயின் அணியை நேற்று முன்தினம் எதிர்கொண்டது. அந்த போட்டியில் 6-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்ற இந்திய அணி, நேற்று மீண்டும் ஸ்பெயின் அணியுடன் மோதியது.

ஸ்பெயின் வீரர் இக்ளேசியஸ் அல்வாரோ 3வது நிமிடத்திலேயே கோல் அடித்து இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தார். எனினும், தன்னபிக்கையுடன் ஒருங்கிணைந்து விளையாடிய இந்திய வீரர்கள் கோல் மழை பொழிந்தனர். ஆகாஷ்தீப் சிங் 5வது நிமிடத்தில் அபாரமாக கோல் அடித்து 1-1 என சமநிலை ஏற்படுத்தினார்.அவரைத் தொடர்ந்து எஸ்.வி.சுனில் (20வது நிமிடம்), ரமன்தீப் சிங் (35வது நிமிடம்) கோல் அடிக்க, இந்தியா 3-1 என முன்னிலை பெற்றது. ஹர்மான்பிரீத் சிங் 41வது மற்றும் 51வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் போட்டு அமர்க்களப்படுத்தினார். ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் ஹாட்ரிக் வெற்றியை வசப்படுத்தியது. இதையடுத்து அக்டோபர் 1, 3 தேதிகளில் மீண்டும் பெல்ஜியம் அணியை எதிர்கொள்கிறது.

Tags : International Hockey India ,Spain , International,Hockey,India hat trick,Spain re-played
× RELATED பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த...