சென்னை: பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ பலியான வழக்கில் அதிமுக பிரமுகர் ஜெயகோபாலின் மைத்துனர் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கைதான ஜெயகோபால் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கொடிகட்டுதல், பேனர் வைக்கும் பணியில் ஈடுபட்ட 4 தொழிலாளர்களை பள்ளிகரணை போலீசார் ஜாமீனில் விடுவித்தனர். சென்னை பள்ளிக்கரணையில் கடந்த 12ம் தேதி இளம்பெண் சுபஸ்ரீ ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது அதிமுகவை சேர்ந்த ஜெயகோபால் வீட்டு நிகழ்ச்சிக்காக சாலை நடுவில் வைக்கப்பட்டிருந்த பேனர் அவர் மீது விழுந்ததில் தடுமாறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் ெதாடர்புடைய அதிமுக பிரமுகர் ஜெயகோபால் தலைமறைவானார்.
அவரை கைது செய்ய தென்சென்னை இணை கமிஷனர் மகேஸ்வரி உத்தரவின்பேரில், மடிப்பாக்கம் உதவி கமிஷனர் சவுரிநாதன், இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள இஸ்லாம்பூரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்கியிருந்த ஜெயகோபாலை நேற்றுமுன்தினம் தனிப்படை போலீசார் கைது செய்தனர். 14 நாட்கள் தலைமறைவாக இருந்து ஜெயகோபாலை நேற்று சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். நேற்று காலை அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும் ஜெயகோபாலிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் கொடி கட்டுவது மற்றும் பேனர் வைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பழனி, சுப்பிரமணி, சங்கர், லட்சுமி காந்தன் ஆகியோரை பள்ளிக்கரணை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வழக்கு ஆவணங்களை படித்து பார்த்த நீதிபதி, ஜாமீனில் வெளிவரக் கூடிய பிரிவுகளில் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் 4 பேரையும் சிறையில் அடைக்க மறுத்து விட்டார். மேலும் அவர்களுக்கு காவல் நிலையத்திலேயே ஜாமீன் வழங்கலாம் என்று கூறி அனுப்பினார். நான்கு பேரையும் பள்ளிகரணை போலீசார் ஜாமீனில் விடுவித்தனர். இதற்கிடையே, சுபஸ்ரீ பலியான வழக்கில் மற்றொரு முக்கிய குற்றவாளியான அதிமுக பிரமுகர் ஜெயகோபாலின் மைத்துனர் மேகநாதனை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.