×

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளில் மாற்றம் கேள்வித்தாளில் தமிழ் நீக்கம்

* தமிழக மாணவர்களுக்கு புதிய ஆபத்து
* வெளிமாநிலத்தவருக்கு கதவை திறக்கும் அரசு

சென்னை: தமிழக அரசு நடத்தும் குரூப்2, குரூப் 2 ஏ ஆகிய தேர்வுகளில் பொது தமிழ் தற்போது நீக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தமிழ் வழியில் கற்று தேர்வு எழுத காத்திருந்தவர்களுக்கு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 தேர்வு மூலம் உயர் பதவிகளான துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி, வணிகவரித்துறை உதவி ஆணையர், மாவட்ட பதிவாளர், மாவட்ட  வேலை வாய்ப்பு அதிகாரி, மாவட்ட தீயணைப்பு அலுவலர் உள்ளிட்ட இடங்களை நிரப்பி வருகிறது. அதே போல, குரூப் 2 தேர்வு மூலம் வருவாய் துறை அதிகாரி, வணிகவரித்துறை அதிகாரி, சுகாதாரத்துறை அதிகாரி, பள்ளிக்கல்வித்துறை அதிகாரி, தொழில் துறை அதிகாரி, கல்லூரி கல்வித்துறை அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பி வருகிறது. குரூப் 2ஏ தேர்வு மூலம் அரசின் அனைத்து துறைகளில் உதவியாளர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். ஆண்டு தோறும் குரூப் 1, குரூப் 2, குரூப் 2ஏ(நேர்முக தேர்வு அல்லாத பதவி) தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. தேர்வாணையம் ஒரு தேர்வை அறிவித்தால் ஒரு பதவிக்கு சுமார் 250 பேர் விண்ணப்பிக்கும் நிலை உள்ளது. அந்த
அளவுக்கு போட்டியும், வேலை இல்லா திட்டாட்டமும் நிலவி வந்தது. டிஎன்பிஸ்சி தற்போது குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வில் பல்வேறு மாற்றங்களை அதிரடியாக கொண்டு வந்துள்ளது. குறிப்பாக குரூப் 2, குரூப்2 ஏ பாடத்திட்டத்தில் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது, முதலில் குரூப் 2, குரூப் 2ஏ முதல்நிலை தேர்வில் பொது தமிழ்  அல்லது பொது ஆங்கிலத்தில் 100 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு 150  மதிப்பெண்களும், பொது அறிவியலில் 100 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு 150  மதிப்பெண் என மொத்தம் 200 கேள்விகளுக்கு என மொத்தம் 300 மதிப்பெண்கள்  வழங்கப்படும்.

தற்போது, பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, காலம் காலமாக கேட்கப்பட்டு வந்த பொது தமிழ் தற்போது நீக்கப்பட்டுள்ளது. தமிழ் நீக்கப்பட்டு  பொது அறிவில்(பட்டப்படிப்பு தரத்தில்)  175 கேள்விகளும், திறனறிவு மனக்கணக்கு நுண்ணறிவு(10ம் வகுப்பு தரப்பில்) 25  கேள்விகளும் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும் என்று புதிய  பாடத்திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 2ஏ தேர்வில் முதல்நிலை தேர்வு மட்டும் தான் இருந்தது. இதில் தேர்ச்சி பெற்றால் அவர்களுக்கு எந்தவித நேர்முக தேர்வும் கிடையாது. நேடியாக பணியில் அமர்த்தப்பட்டு வந்தனர். தற்போது குரூப் 2ஏவில் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவோர், குரூப் 2 தேர்வை போன்று மெயின் தேர்வை எழுத வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குரூப் 2, குரூப் 2ஏ மெயின் தேர்வில் தமிழில் இருந்து  ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்தல் 2 கேள்விகளுக்கு 25 மதிப்பெண் வீதம் 50  மதிப்பெண், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தலில் 2  கேள்விகளுக்கு 25 மதிப்பெண் வீதம் 50 மதிப்பெண்கள் வழங்கப்படும். சுருக்கி வரைதல் 2  கேள்விகளுக்கு தலா 20 மதிப்பெண் வீதம் 40 மதிப்பெண், பொருள் உணர்திறன் 2 கேள்விகளுக்கு தலா 20  மதிப்பெண் வீதம் 40 மதிப்பெண்களும், சுருக்க குறிப்பில் இருந்து  விரிவாக்கம் செய்தல் 2 கேள்விகளுக்கு 20 மதிப்பெண் வீதம் 40 மதிப்பெண்,  திருக்குறள் தொடர்பான கட்டுரை வரைதல் 2 கேள்விகளுக்கு தலா 20 மதிப்பெண்கள்  வீதம் 40 மதிப்பெண்ணும், கடிதம் வரைதல்(அலுவல் சார்ந்தது) 2 கேள்விகளுக்கு  தலா 20 மதிப்பெண் வீதம் 40 மதிப்பெண் என மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சியின் இந்த புதிய அறிவிப்பால் தமிழ் மொழி பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு இனி பணி கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது. மத்திய அரசு நடத்தும் தேர்வுகள் அனைத்திலும் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து பணியிடங்களிலும் வெளிமாநிலத்தவரை சேர்ந்தவர்கள் பணியமர்த்தப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் மாநில அரசு நடத்தும் தேர்விலே தாய் மொழியான தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது தேர்வு எழுதுபவர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் பொது தமிழ் இருந்ததால் ஏராளமானோர் தேர்ச்சி பெற்று பணிக்கோ அல்லது மெயின் தேர்வுக்கோ தகுதி பெறும் நிலை இருந்து வந்தது. இந்த புதிய பாடத்திட்டத்தால் அவர்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த புதிய பாடத்திட்டத்தை மாற்றி பழைய பாடத்திட்டத்திலேயே தேர்வை நடத்த வேண்டும் என்று தேர்வு எழுதுபவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். டிஎன்பிஎஸ்சியின் இந்த புதிய அறிவிப்புக்கு பல்வேறு தரப்பில் கண்டனம் எழுந்துள்ளது.

இது குறித்து கல்வியாளர்கள் பிரகாஷ் குமார், தங்கராஜ் ஆகியோர் கூறுகையில், “ டிஎன்பிஎஸ்சி தேர்வில் பொது தமிழ் இருப்பதால் எளிதாக மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்று வந்தனர். தற்போது பழைய பாடத்திட்டத்தில் வரப்போகும் குரூப் 2ஏ தேர்வை எழுத ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தனர். அவர்கள் தற்போது புதிய பாடத்திட்டத்தால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனால், அவர்கள் புதிய பாடத்திட்டத்தை மாற்றி படிப்பது என்பது முடியாத காரியம். இதற்காக அவர்கள் தனியார் பயிற்சி மையத்திற்கு அதிக செலவழித்து சேரும் நிலை தான் ஏற்படும். மொத்தத்தில் தனியார் பயிற்சி மையத்திற்கு ஆதரவாகவே இந்த புதிய தேர்வு முறை உள்ளது” என்றனர்.

85 லட்சம் பேர் காத்திருப்பு

* அரசின் வேலைவாய்ப்பு துறையில் 10, 12ம் வகுப்பு, முதுநிலை, இளநிலை பட்டப்படிப்பு, பொறியியல், மருத்துவம் என படித்து சுமார் 85 லட்சம் பேர் அரசு வேலைக்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது.
* மின்வாரியம் உள்ளிட்ட பல துறைகளில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களை வேலையில் சேர்த்துள்ளனர்.
* புதிய பாடத்திட்ட மாற்றத்தால், வேலை இல்லா திண்டாட்டம் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

Tags : Tamil ,DNBSC Group 2 ,TNPSC Group 2 , Tamil elimination , TNPSC Group 2 exams
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து: ராமதாஸ் வரவேற்பு