×

இந்திய கடல் எல்லையில் சட்டவிரோதமாக நுழைந்த 3 இலங்கை மீனவர்கள் விமானத்தில் அனுப்பி வைப்பு: சென்னை சட்டப்பணி ஆணைய செயலாளர் நடவடிக்கை

சென்னை: இந்திய கடல் எல்லையில் சட்டவிரோதமாக நுழைந்த 3 இலங்கை மீனவர்களின் சிறை தண்டனை காலம் முடிந்ததும், உரிய ஆவணங்களுடன் சட்டப்பணிகள் ஆணைய செயலாளர் நேற்று மதியம் விமானத்தில் திருப்பி அனுப்பி வைத்தார்.
இலங்கையை சேர்ந்த மீனவர்கள் முகமது ராஜிஸ் (32), வசீகரன் (20), முகமது ரிகாஸ் (23) ஆகிய 3 பேரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேதாரண்யம் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.  அப்போது இந்திய கடலோர காவல் படையினர், 3 பேரையும் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கைது செய்தனர். பின்னர் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.  இவர்களின் தண்டனை காலம் முடிந்தும், பாஸ்போர்ட் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்கள் இல்லாததால், இலங்கைக்கு திரும்ப முடியாமல் தொடர்ந்து புழல் சிறையிலேயே இருந்தனர்.

இந்நிலையில், இவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதற்கான முயற்சிகளில் சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழு செயலாளர் ஜெயந்தி ஈடுபட்டார். இதற்கிடையே சென்னையில் உள்ள இலங்கை தூதரக உதவியுடன் 3 பேருக்கான பாஸ்போர்ட் ஆவணங்கள் தயார் செய்யப்பட்டன. இதையடுத்து, 3 பேரும் நேற்று பகல் 12 மணியளவில் சென்னையில் இருந்து இலங்கை செல்லும் இண்டிகோ விமானத்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் 3 இலங்கை மீனவர்களும்  நிருபர்களிடம்  கூறியதாவது: நாங்கள் கடந்த 3 மாதத்துக்கு முன்பு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தோம். அப்போது வழிதவறி இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து விட்டோம்.

இந்நிலையில், எங்களை இந்திய சட்டப்பணிகள் ஆணையத்தின் சென்னை மாவட்ட  செயலாளர் ஜெயந்தி சிறையில் சந்தித்து, எங்களை பற்றிய விவரங்களை கேட்டறிந்தார். அதன் பிறகு நாங்கள் இலங்கைக்கு திரும்புவதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார். இப்போது நாங்கள் இலங்கை தூதரக அதிகாரிகளின் உதவியுடன் நாடு திரும்புகிறோம். அப்போதுதான்  இதேபோல் இந்திய மீனவர்கள் எங்கள் நாட்டு சிறையில் சிலர் இருக்கின்றனர். அவர்களின் மனதும் எங்களை போன்றுதான் வேதனைப்படும் என்பதை உணர்ந்து கொண்டோம். எனவே நாங்கள் விடுதலை ஆகி எங்கள் நாட்டிற்கு சென்றதும், எங்கள் நாட்டு அரசிடமும், அதிகாரிகளிடமும், இந்திய மீனவர்களை, குறிப்பாக தமிழக மீனவர்களை சிறையில் இருந்து விடுவித்து அவர்கள் நாட்டிற்கு விரைவில் அனுப்பி வையுங்கள் என்ற கோரிக்கைகளை வலியுறுத்துவோம் என்று கூறி, விட்டு உற்சாகமாக விமானத்தில் ஏறி சென்றனர்.

Tags : fishermen ,Sri Lankan ,Indian ,Chennai Legal Action Commission , Secretary of the Indian Ocean Bureau, 3 Sri Lankan Fishermen, Aircraft, Madras Law Commission
× RELATED இலங்கை சிறையிலிருந்து...