×

கர்நாடகாவில் தொலைபேசி ஒட்டு கேட்பு புகார்: மூத்த ஐபிஎஸ் அதிகாரி வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை

பெங்களூரு: கர்நாடகாவில் தொலைபேசி ஒட்டு கேட்பு புகார் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள், மூத்த ஐபிஎஸ் அதிகாரி அலோக்குமார் வீட்டில் சோதனை நடத்தி வருகிறார்கள். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சியின்போது சில அரசு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும் பல்வேறு அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்தது. சிலர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து, அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அந்த  நேரத்தில் சில முக்கிய போலீஸ் அதிகாரிகள் பணியிடமாற்றமும் செய்யப்பட்டனர். இந்த நிகழ்வுகளுக்கு இடையே திடீரென்று மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பாஜவை சேர்ந்த எடியூரப்பா முதல்வராக ஆட்சி கட்டிலில் அமர்ந்தார்.

அவர் வந்த பின்னர் செல்போன் ஒட்டுகேட்பு விவகாரம் பூதாகரமானது. அதாவது சிட்டி கமிஷனராக நியமிக்கப்பட்ட பாஸ்கர்ராவ் சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்டிருப்பதாகவும், இதற்கு அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக சில அரசியல் தலைவர்கள் மற்றும் போலீசார் பேசிய செல்போன் அழைப்புகள் ஒட்டு கேட்கப்பட்டது. மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் முதல்வர் எடியூரப்பாவிடம் இது தொடர்பாக விவரம் கொடுத்தார். அதை ஆதாரமாக எடுத்து கொண்ட முதல்வர் உடனே இந்த செல்போன் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி, அறிக்கை அறிக்கவேண்டுமென்று டி.ஜி.பி நீலமணிராஜிற்கு உத்தரவிட்டார்.

அவர் இணை கமிஷனர் சந்தீப் பாட்டீல் தலைமையிலான போலீசாரை நியமனம் செய்து, விசாரணை நடத்தும்படி கூறினார். அவர்கள் விசாரணை நடத்தினர். முதலாவதாக மஜதவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ விஸ்வநாத், கொடுத்த தகவலின் பேரில் சில அரசு அதிகாரிகள், அரசியல் புள்ளிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கிடைத்த தகவலை ஆதாரமாக பதிவு செய்து கொண்ட போலீசார், மாநில டி.ஜி.பி நீலமணிராஜிடம் ஒப்படைத்தனர்.  இந்நிலையில் திடீரென்று இந்த வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ அதிகாரிகள் கேட்டு கொண்டதன் பேரில் மாநில போலீசாரின் கையில் இருந்த அனைத்து ஆதாரங்களும் சி.பி.ஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதை வாங்கிய சி.பி.ஐ அதிகாரிகள், செல்போன் ஒட்டுகேட்பு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து அரசு அதிகாரிகள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த அலோக்குமாரிடம் ஒட்டுகேட்பு தொடர்பாக பென் டிரைவ் இருப்பதாக சிபிஐ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக அவரிடம் பலமுறை விசாரணை நடத்தியும் விவரம் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று அதிகாலை அவரது வீட்டிற்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் குழுவினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

அவரது வீடு மட்டுமில்லாமல் உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது. அலோக்குமார் வீட்டில் சில காகித ஆவணங்கள் கிடைத்துள்ளதாக தெரியவருகிறது. ஆனால் சிபிஐ அதிகாரிகள் எதிர்பார்க்கும் பென்டிரைவ் மட்டும் இன்னும் கிடைக்கவில்லை என்று தெரியவருகிறது. மூத்த ஐபிஎஸ் அதிகாரி வீட்டில் சிபிஐ சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : IPS Officer ,Senior ,Karnataka ,CBI Action Inspector At Home , Karnataka, Senior IPS Officer, CBI, Trial
× RELATED கேரளாவின் திருச்சூர் பூரம் விழாவில்...