×

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு ப.சிதம்பரம் ஜாமீன் மனு ஒத்திவைப்பு : டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் நாளை ஒத்திவைத்துள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நீதிமன்ற காவலில் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு, கடந்த 11ம் தேதியில் இருந்து விசாரணையில் இருக்கிறது. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் கெயிட் முன்னிலையில் நேற்று பிற்பகல் மீண்டும் இந்த மனு மீது விசாரணை நடந்தது. அப்போது ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதாடுகையில், ‘‘ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கினால் அவர் வெளிநாடு தப்பிவிடுவார், சாட்சியங்களையும், ஆதாரங்களையும் கலைத்து விடுவார் எனக்கூறி அதனை நிராகரிக்க வேண்டும் என சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் வலியுறுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்னாள் நடந்த ஒரு விவகாரத்தில் அது தொடர்பான ஆதாரத்தை தற்போது அழிக்க முடியுமா?’’ என்றார்.

சிபிஐ தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து வழக்கை நாளைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அமலாக்கத்துறை மனு: இந்நிலையில், மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் தொடர்பாக அமலாக்கத்துறை தரப்பில் நேற்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், இருவரின் முன்ஜாமீனை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும். இதில் சட்டவிரோத முறைகேடு நடந்ததற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதே கோரிக்கை மனு சிபிஐ தரப்பிலும் கடந்த வாரத்திற்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் சில பிழை இருந்ததால் அதனை மீண்டும் திருத்தி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Tags : INC Media ,Delhi High Court ,INX ,Delhi , Delhi highcourt , bail plea, INX media
× RELATED 70,772 கிலோ ஹெராயின் மாயம்; ஒன்றிய உள்துறை...