×

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 89.5 கோடி பணப்பட்டுவாடா வழக்கு தேர்தல் ஆணையம் தலையிட்டு சிபிஐக்கு வழக்கை மாற்ற வேண்டும்: தேர்தல் அதிகாரிகள் மீதான நம்பகத்தன்மை பாழாகிவிடும் என மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ரூ.89.5 கோடி பணப்பட்டுவாடா செய்த வழக்கில், இந்திய தேர்தல் ஆணையம் தலையிட்டு சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  ‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது, முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் 2 லட்சத்து 24 ஆயிரத்து 145  வாக்காளர்களுக்கு,  தலா ரூ.4000 வீதம், ரூ.89.5 கோடி பணம் பட்டுவாடா செய்ய வைத்திருந்த பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர்  விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து வருமான வரித்துறை கைப்பற்றியது தொடர்பான முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை’ என்று அதிமுக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில்  அறிவித்திருப்பதற்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த இடைத்தேர்தலின்போது, மாவட்டத் தேர்தல் அதிகாரியாக இருந்த கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்., இந்த  முதல் தகவல் அறிக்கை ரத்தானது குறித்து இதுவரை மேல்முறையீடு செய்யாமல் இருப்பதும், அதை மாநிலத் தலைமைத் தேர்தல்  அதிகாரியும், இந்தியத் தேர்தல் ஆணையமும் கை கோர்த்து ஏதோ உள் நோக்கத்துடன் வேடிக்கை பார்ப்பதும் ‘நேர்மையான, சுதந்திரமான’ தேர்தலுக்கு மிகப்பெரிய நெருக்கடியையும் ஆபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பரபரப்பு மிகுந்த இந்த  வருமான வரித்துறை சோதனை குறித்த தகவல்கள் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டு, அதன் மீது, ‘முதல்வர், அமைச்சர்கள் மீது  வழக்குப் பதிவு செய்ய வேண்டும்’ என்று தேர்தல் ஆணையம் 21.4.2017ல் மாநகர  போலீஸ் கமிஷனருக்குக்  கடிதம் எழுதியது. ஆனால் அந்தப்  புகார் வேண்டுமென்றே கிடப்பில் போடப்பட்டது.

 பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்யநாராயணா தலைமையிலான அமர்வு, சென்னை கிழக்குப் பகுதி இணை ஆணையரை இந்த வழக்கின்  விசாரணையைக் கண்காணிக்கும் அதிகாரியாகவே நியமித்தது. ஆனால், சென்னை, அபிராமபுரம் காவல்நிலையத்தில் ‘மொட்டையாக’ யார் பெயரும் இல்லாமல், ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த முதல் தகவல் அறிக்கையையும் ரத்து செய்ய வேண்டும் என்று, வழக்கிற்கு சம்பந்தமே இல்லாத ‘பி.எம். நரசிம்மன்’ என்பவர், தனி நீதிபதியிடம் ஒரு வழக்கைத் தொடுத்து, பெருநகர  மாஜிஸ்திரேட்டிடம் முன் அனுமதி பெற்று வழக்குப்  பதிவு செய்யப்பட்டதையும் மறைத்து,   முதல் தகவல் அறிக்கையை தனி நீதிபதி மூலம் ரத்து செய்ய வைத்தது அதிமுக அரசு.  
 இதை மாவட்ட தேர்தல் அதிகாரியோ, உயர் நீதிமன்றத்தால் வழக்கை கண்காணிக்க நியமிக்கப்பட்ட இணை போலீஸ் கமிஷனரோ, மாநில தலைமை தேர்தல் அதிகாரியோ கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை  உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சத்தியநாராயணா, சேஷசாயி முன்பு வந்த போது, “எப்.ஐ.ஆரை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை” என்று அதிமுக அரசு கூறியிருக்கிறது.  அந்த வழக்கு மேல்முறையீட்டுக்கு உகந்தது அல்ல என்று அரசு சட்ட ஆலோசனை வழங்கியுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் கூறியிருக்கிறார். தேர்தல் காலத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை குறித்து  நடவடிக்கை எடுக்க இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு முழு சுதந்திரமும் அதிகாரமும் இருந்தும், மாவட்ட தேர்தல் அதிகாரி  கார்த்திகேயனின் சட்ட விரோதச் செயலைக் கண்டு கொள்ளாமல் இருப்பது கவலையளிக்கிறது.

 ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருக்கும் கார்த்திகேயன், ஆளுங்கட்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சருக்குக் கட்டுப்பட்டு, தேர்தல் ஆணையத்தின் உத்தரவையே அவமதிப்பதும், வருமான வரித்துறை அதிகாரிகள் அளித்த அறிக்கையை  உதாசீனப்படுத்துவதும் கடும் கண்டனத்திற்குரியது.  ஆகவே ரூ.89 கோடி, ஆர்.கே.நகர் பணப் பட்டுவாடா பட்டியல் கைப்பற்றப்பட்டது குறித்து முறையாக புகார் அளிக்காத தேர்தல் அதிகாரி, பெயர்களே இல்லாமல் எப்.ஐ.ஆர். போட்ட போலீஸ் அதிகாரி, உயர் நீதிமன்ற உத்தரவின் கீழ் முறையாக  இந்த வழக்கினைக் கண்காணிக்காத அப்போதைய இணை போலீஸ் கமிஷனர், இதுவரை தனி நீதிபதியின் உத்தரவினை எதிர்த்து மேல்முறையீடு கூட செய்யாத மாவட்ட தேர்தல் அதிகாரி ஆகிய அனைவர் மீதும் இந்தியத்  தேர்தல்  ஆணையமே தலையிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த வழக்கினை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்றும்  இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையரே உயர்நீதிமன்றத்தில் வலியுறுத்த வேண்டும்.  இல்லாவிட்டால், இந்திய வாக்காளர்கள், தேர்தல் நடைமுறைகளின் மீதும், தேர்தலை நடத்தும் அதிகாரிகள் மீதும் கொண்டுள்ள நம்பகத்தன்மை பாழ்பட்டுப் போய்விடும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.   இவ்வாறு  அவர் கூறியுள்ளார்.


Tags : Election Commission ,RK Nagar ,case commission ,election officials ,MK Stalin ,CBI , 89.5 crores , RK Nagar, by-election, transfer,undermined
× RELATED செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு மோடி செய்தது `அரசியல் தியானம்’