×

மாறுதல் பணியிடம் பெற்றவர்களை உடனே விடுவிக்க மின்வாரியம் உத்தரவு

சென்னை: மாறுதல் பணியிடம் வழங்கியவர்களை பழைய இடத்திலிருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும் என அனைத்து தலைமை பொறியாளர்களுக்கும், தமிழக மின்சாரவாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழக மின்சாரவாரியத்தில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடம் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்வேறு ஊழியர்களுக்கு பணிமாறுதல், பதவி உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் காலிப்பணியிடங்கள் இருப்பதை காரணம் காட்டி, மாற்று பணியிடத்திற்கு பலரையும் ஒருசில தலைமைபொறியாளர்கள் அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு பணிகள் பாதிக்கப்படும் என அவர்கள் நினைப்பதே காரணம். இந்நிலையில் இந்தவிவகாரம் மின்வாரியத்தின் தலைமை அலுவலகத்திற்கு சென்றது. இதையடுத்து உடனடியாக மாறுதல் பணியிடம் வழங்கப்பட்டவர்களை உடனடியாக பழைய பணியிடத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழக மின்சாரவாரியத்தில் பல்வேறு பதவிகளில் ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் இளநிலை உதவியாளர் (நிர்வாகம்), நிர்வாக உதவியாளர், நிர்வாக மேற்பார்வையாளர்கள் பதவிகளுக்கு ஊர் மாறுதல், பதவி உயர்வில் வட்ட ஒதுக்கீடு, விருப்ப ஊர் மாற்றம் ஆகியவை வழங்கப்பட்டது. ஆனால் அவ்வாறு வழங்கப்பட்டவர்களில் பலர், பழைய பணியிடத்திலேயே தொடர்கின்றனர். இதனால் பணியிடங்களை நிரப்புவதிலும், வேறு நபர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் நிர்வாகப்பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சம்மந்தப்பட்டவர்களை, உடனடியாக மாறுதல் பணியிடத்திற்கு அனுப்ப வேண்டும் என மின்வாரிய தலைமை அலுவலகம் அனைத்து தலைமை பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து நாங்கள் சம்மந்தப்பட்ட பணியில் நாங்கள் தீவிரம் காட்டி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Recipient ,Electricity Board , Electricity Board
× RELATED பெரம்பலூரில் மின்கம்பிகளை உரசிய மரக்கிளைகளை அகற்றும் பணி