×

மதுரையில் போலி ஆணையுடன் 2 பேர் வந்த விவகாரம் மருத்துவக்கல்லூரியில் சேருவதற்கான ஆணை தருவதாக பல கோடி வசூல்: 60க்கும் மேற்பட்டோரிடம் டெல்லி கும்பல் மோசடி

மதுரை:  போலி ஆணை மூலம் மதுரை மருத்துவக்கல்லூரிக்கு சேர வந்த 2 பேர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், 60க்கும் மேற்பட்டோரிடம் டாக்டர் படிப்பில் சேர ஆணை தருவதாகக் கூறி குறைந்தது தலா 8 லட்சம் என பல கோடி ரூபாயை,  டெல்லி கும்பல் வசூல் வேட்டை நடத்திய அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் பன் நறு நிவாஸ். பீகாரை சேர்ந்தவர் நிதிவர்மன். இருவரும் மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் சேர்வதற்கான ஆணையுடன் வந்தனர். கல்லூரி முதல்வர் வனிதா ஆய்வு செய்தபோது அது  போலியானது எனத்தெரிந்தது. அவரது புகாரின்படி மதுரை தல்லாகுளம் போலீசார், பன் நறு நிவாசை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். இதில், டெல்லியில் உள்ள ‘கிராக் யுவர் கேரியர்’ தனியார் நிறுவனத்தை சேர்ந்த விக்ரம் சிங் என்பவர், தன்னிடம் ₹8 லட்சம் பெற்று இந்த ஆணையை கொடுத்ததாக தெரிவித்தார். ேமலும் பன் நறு நிவாஸ், நிதி வர்மன் போல, டெல்லி கும்பல்  60க்கும் மேற்பட்டோரிடம் குறைந்தது ₹8 லட்சம் என பல கோடிக்கும் மேலாக வசூல் வேட்டையில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது.  இதுகுறித்து மதுரை போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறுகையில், ‘‘டீன் வனிதா கொடுத்த புகாரின்பேரில் இங்கு வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை. அதேநேரம், சம்பவம் நடந்த இடமான டெல்லியில் உள்ள காவல்துறைக்கு  ஆவணங்கள் மற்றும் புகார் மனுக்கள், விசாரணை விவரங்களை அனுப்பினோம். இதுதொடர்பாக பிடிபட்ட நபரிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்’’ என்றார்.

  மதுரை மருத்துவக்கல்லூரி முதல்வர் வனிதா கூறும்போது, ‘‘மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் 250 பேருக்கு அட்மிஷன் முடிந்தது. அட்மிஷன் முடிந்த நிலையில் சமீபத்தில் மேலும் 2 பேர் வந்தனர். அவர்கள் கொண்டு வந்தது போலி  ஆணை என தெரிந்தது.
தொடர்ந்து போலீசிடம் அவர்கள் மீது புகார் தெரிவித்தோம். இதில் ஒருவர் மாயமானதாக தெரிகிறது. மதுரையில் மருத்துவப்படிப்புக்கு தேர்வானவர்களில் 210 பேரின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. இதில் எதுவும் போலி சான்றிதழ் இல்லை.  மீதமுள்ள 40 பேரின் சான்றிதழ்களையும் தொடர்ந்து பரிசீலித்து வருகிறோம்’’ என்றார்.  இதற்கிடையில் மதுரைக்கு போலி ஆணையுடன் வந்து திடீரென மாயமான பீகாரைச் சேர்ந்த நிதிவர்மனை டெல்லி போலீசார் தேடி வருகின்றனர். இதற்கென அங்கிருந்து தனிப்படையினர் பீகார் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.  மேலும்,  டெல்லியில் பதுங்கியுள்ள மோசடி கும்பலை தேடும் பணியிலும் போலீசார் இறங்கியுள்ளனர்.

தேனி மருத்துவக்கல்லூரி முதல்வரிடம் 5 மணி நேரம் விசாரணை
தேனி மருத்துவக்கல்லூரியில் நீட்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து சேர்ந்த சென்னை மாணவன் உதித்சூர்யா பற்றிய புகாரையடுத்து, கண்டமனூர் விலக்கு போலீசார் மாணவன் உதித்சூர்யா, போலி உதித்சூர்யா ஆகியோர் மீது (419 ஐபிசி) ஆள்  மாறாட்டம் செய்வது, (420 ஐபிசி) மோசடியில் ஈடுபடுவது, (120 பி) அரசுத்துறைகளை ஏமாற்றுவது ஆகிய பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் செப்.11ம் தேதி ஆள் மாறாட்டம் பற்றிய தகவல் அறிந்ததும், முதல்வர்  ராஜேந்திரன் மாணவன் உதித்சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் மற்றும் தாய் ஆகியோரிடம் விசாரணை நடத்தி உள்ளார். அப்ேபாதே அவர்களை போலீசில் ஒப்படைக்காதது தற்போது பிரச்னையை பெரிதுப்படுத்தி உள்ளது.

உதித்சூர்யாவின்  தந்தை வெங்கடேசனும், ராஜேந்திரனும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஒன்றாக பணி புரிந்துள்ளனர். இந்த நட்பு காரணமாக, அவரது மகன் மருத்துவக்கல்லூரியில் சேர முதல்வர் ராஜேந்திரன் மறைமுகமாக உதவி செய்திருக்கலாம்  என்ற புகார் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று காலை ஆண்டிபட்டி டிஎஸ்பி சீனிவாசன் மருத்துவக்கல்லுாரிக்கு வந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். இதையடுத்து ஆண்டிபட்டி இன்ஸ்பெக்டர் உஷா, விசாரணைக்கு ஆஜராகும்படி  முதல்வர் ராஜேந்திரனுக்கு கடிதம் அனுப்பினார். இந்நிலையில் நேற்று மாலை இன்ஸ்பெக்டர் உஷா, முதல்வர் ராஜேந்திரன் அறைக்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தினார். இது 5 மணி நேரம் நீடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Madurai ,gang-rape ,Medical College Delhi , Madurai , fake orders,Medical College,orders
× RELATED மாதம் ரூ.5 ஆயிரம் உதவித்தொகை கோரி...