அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 8வது மாடியிலிருந்து தவறிவிழுந்து ஐ.டி. பெண் ஊழியர் பரிதாப பலி: படிக்கட்டில் நடைபயிற்சி செய்தபோது பரிதாபம்

சென்னை: அம்பத்தூர் தொழிற்பேட்டை, ஆம்பிட் பூங்கா சாலையில் 11 மாடி கட்டிடத்தில் ஐ.டி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த கட்டிடத்தில் 2வது தளத்தில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் திருச்சி, அமலாபுரி காலனியை சேர்ந்த டெனிடா ஜூலியஸ் (24) என்பவர் கடந்த 18ம்தேதி வேலையில் சேர்ந்தார். இவர், சென்னை, தி.நகரில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தார். சென்னையில் பி.ஏ. (ஆங்கிலம்) பட்டப்படிப்பை முடித்துவிட்டு, வடபழனியில் உள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் ஆரம்பத்தில் பணியாற்றினார்.  பின்னர், நேற்று முன்தினம் காலை டெனிடா ஜூலியஸ், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள புதிய ஐ.டி நிறுவனத்திற்கு முதல்நாள் பணிக்கு வந்துள்ளார். பின்னர், இரவு பணி முடிந்து நிறுவனத்திலிருந்து வீட்டுக்கு புறப்பட்டார். அவர் லிப்ட் வழியாக செல்லாமல் படிக்கட்டு வழியாக 8வது மாடிக்கு சென்றுள்ளார். அங்கிருந்து திடீரென தவறி கீழே விழுந்தார்.

இதில், மண்டை உடைந்து தரை தளத்தில் டெனிடா ஜூலியஸ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாதுகாவலர்கள் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். இது, அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர், சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் விஜயராகவன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐடி நிறுவன அதிகாரிகள், ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் நேற்று காலை திருச்சியில் இருந்து டெனிடா ஜூலியஸ் பெற்றோர் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையம் வந்தனர். விசாரணையில், டெனிடா ஜூலியஸ் சற்று குண்டாக இருப்பார்.

அவரது உடல் எடையை குறைக்க அடிக்கடி மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொள்வது, பல்வேறு உடற்பயிற்சிகளை செய்து வந்து உள்ளார். மேலும், அவர் வீடு, கம்பெனியில் லிப்ட்டை பயன்படுத்தாமல் படிக்கட்டுகள் வழியாகத்தான் சென்று வருவாராம். ஏற்கனவே, அவர் பணியாற்றிய நிறுவனத்திலும் படிக்கட்டில் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அதுபோல நேற்று முன்தினமும், ஜூலியஸ் வேலை முடிந்த பிறகு படிக்கட்டு வழியாக நடைபயிற்சி மேற்கொண்டு 8வது மாடி சென்றுவிட்டு மீண்டும் படிக்கட்டு வழியாக கீழே இறங்கி வந்தபோது, தவறி கீழே விழுந்து இறந்தது தெரியவந்துள்ளது.Tags : IT team ,floor ,Ambattur Industrial Estate ,servant ,IT Female , Ambattur Industrial Estate, IT Female servant, killed
× RELATED அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பராமரிப்பு இல்லாத கால்வாய்