×

லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்த நிலையில் கான்ட்ராக்டர்கள் உரிமம் புதுப்பிக்கும் வசதி ஆன்லைனுக்கு மாறுகிறது : தமிழக அரசு நடவடிக்கை

சென்னை: லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்த நிலையில், அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் கான்ட்ராக்டர்கள் உரிமம் புதுப்பிக்கும் வசதியை கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழக பொதுப்பணித்துறையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கான்ட்ராக்டர்கள் உள்ளனர். இந்த கான்ட்ராக்டர்கள் உரிமத்தை ஆண்டுக்கு ஒரு முறை அவர்களிடமே புதுப்பித்து கொள்ள முடியும். இந்த நிலையில் அந்த கான்ட்ராக்டர் உரிமத்தை அந்தெந்த மண்டல கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் புதுப்பித்து கொள்ள முடியும். ஆனால், கடந்த 2018 முதல் முதன்மை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் தான் கான்ட்ராக்டர் உரிமம் புதுப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள கான்ட்ராக்டர்கள் உரிமம் புதுப்பிக்க முதன்மை தலைமை பெறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து வருகின்றனர். அவ்வாறு வரும் கான்ட்ராக்டர்களிடம் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது.

குறிப்பாக, கான்ட்ராக்டர்களிடம் 10 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக கூறப்படுகிறது. அவர்கள் தாங்கள் கேட்கும் பணத்தை கொடுக்கும் கான்ட்ராக்டர்களின் உரிமம் மட்டுமே உடனடியாக புதுப்பித்து தருகின்றனர். இல்லையெனில் கான்ட்ராக்டர்களை திருப்பி அனுப்புவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த 8ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது.  இதையடுத்து அடுத்த ஆண்டு முதல் கான்ட்ராக்டர் உரிமத்தை ஆன்லைன் புதுப்பித்து கொள்ளும் வசதியை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முடிவு செய்து. தற்போது இதற்காக, கண்காணிப்பு பொறியாளர் சத்தியமூர்த்தி தலைமையிலான குழுவினர் மூலம் இதற்கான வேலை நடந்து வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் கான்ட்ராக்டர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் புதுப்பித்து கொள்ள விண்ணப்பித்து கொள்ள முடியும். மேலும், அவ்வாறு புதுப்பிக்க விண்ணப்பிப்பவர்களுக்கு ஆன்லைனில் சான்று வழங்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உரிமம் புதுப்பிக்க தாமதத்தால் டெண்டர் நிறுத்தி வைப்பு:

தமிழகம் முழுவதும் கான்ட்ராக்டர்கள் ஏராளமானோர் உரிமம் புதுப்பிக்க முதன்மை தலைமை பொறியாளர் அலுவலகத்துக்கு வந்துள்ளனர். இந்த அலுவலகத்தில் தலைமை வரை தொழில் அலுவலர் அசோகன், கண்காணிப்பாளர் சந்திரசேகரன் மட்டுமே இப்பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இரண்டு பேர் மட்டுமே உள்ளதால் புதுப்பிக்க விண்ணப்பித்தால் கூட உடனடியாக சான்று கிடைப்பதில்லை. இதனால் கான்ட்ராக்ர்கள் டெண்டருக்கு விண்ணப்பித்தும், அவர்களால் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான மண்டலங்களில் கான்ட்ராக்டர் உரிமம் புதுப்பிதை காரணம் காட்டி டெண்டர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu , Contenders' license ,renewal facility, switched online
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...